புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு விரைவாக மீட்டது என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரைத் தொடர்ந்து உக்ரைனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டது. ’ஆபரேஷன் கங்கா’ என்ற இந்த நடவடிக்கை மூலம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்.
இந்நிலையில் மக்களவையில் ‘ஆபரேஷன் கங்கா’ தொடர்பான கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று அளித்த பதில் வருமாறு:
உக்ரைனில் இருந்து மிகவும் சவாலான மீட்புப் பணியை இந்தியா மேற்கொண்டது. குறிப்பாக அங்கு சிக்கிய இந்தியர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு விரைவாக மீட்டது. இது மற்ற நாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. உக்ரைன் நாட்டில் இந்தியா மேற்கொண்டது போல, இதற்கு முன் இவ்வளவு பெரிய அளவில் வேறு எந்த நாடும் தங்கள் குடிமக்களை வெளியேற்றியதில்லை.
நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு இந்த அளவிலான ஒத்துழைப்பு கிடைத்திருக்காது. மீட்புப் பணியில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தேர்தல் பணிக்குமத்தியிலும் கூட்டங்கள் நடத்தினார். நிலைமையை கண்காணித்து வந்தார். உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா ஆதரிக்கிறது. இந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கும்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரவும் இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். இந்த விஷயத்தில் இந்தியா ஏதேனும் உதவி செய்ய முடிந்தால், அதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.ரஷ்யா தொடர்ந்து இந்தியாவின் முக்கிய பொருளாதார கூட்டாளியாக இருந்து வருகிறது. இந்தியா – ரஷ்யா இடையே பொருளாதார பரிவர்த்தனைகளை ஸ்திரப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூசும் முயற்சிகள் துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
– பிடிஐ