வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியபோது, தங்கள் நாட்டின் அணு ஆயுதங்கள் தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். அன்றிலிருந்தே ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்துமா என்பது குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக புகைப்படம் எடுக்கும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் மூலமாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் போர் கப்பல்கள், ஏவுகணை தளங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பதுங்குகுழிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
ஆனால் இதுவரையில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் எதையும் ரஷ்யா மேற்கொள்ளவில்லை என இதுகுறித்து ஆய்வு செய்து வரும் அறிஞர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். நேட்டோ அமைப்பும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் மார்ச் 23-ம் தேதி இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம் அமெரிக்காவில் உள்ள அணு ஆயுத பயன்பாடுகளை ஆய்வு செய்யும் அமைப்புகள் ரஷ்யாவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. போர்க்களத்தில் பெருமளவு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க அணு ஆயுதங்களை பயன்படுத்
தும் ஒத்திகையை பல சமயங்களில் ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் என்ன கருதுகிறார் என்பதைப் பொறுத்தே விளைவுகள் இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை சரிக்கட்ட அவர் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே அவை தெரிவித்துள்ளன. ஒருவேளை அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா முடிவெடுத்துவிட்டால் சாதாரணமாக குண்டுவீச்சு தாக்குதலை அந்நாட்டு ராணுவம் வெகுவாக குறைத்திருக்கும் என்று அமெரிக்க அணு ஆயுத தகவல் மைய இயக்குநர் ஹான்ஸ் எம் கிரிஸ்டென்சன் தெரிவித்துள்ளார்.
தீவிரமாக கண்காணித்தாலும் அமெரிக்காவுக்கு ரஷ்யா குறித்த அச்சம் முற்றிலுமாக நீங்கவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் 1962-ம் ஆண்டு 158 அணு ஆயுதங்கள் கியூபாவுக்கு சப்ளை செய்யப்பட்டன. இவை அனைத்தும் அமெரிக்காவுக்குத் தெரியாமலேயே நடைபெற்றன. ஆனால் இப்போது அரசு மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள் அணு ஆயுதம் சார்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. நிலத்தை ஆராய அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் புவியின் ஒவ்வொரு அங்குலத்தையும் தீவிரமாக படமெடுத்து அனுப்புகின்றன. இதில் அணு ஆயுதங்கள் இடம் நகர்ந்தாலும் துல்லியமாகத் தெரிந்துவிடும்.
உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவிடம் அதிக அளவிலான அணு ஆயுதங்கள் உள்ளன என்பதே உண்மை நிலவரமாகும். போர் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே ரஷ்யாவின் ராணுவ நகர்வுகளை துல்லிய
மாகக் கண்காணிக்கும் பணியை ஒரு தனியார் செயற்கைக்கோள் மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலின் நகர்வுகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படு கிறது. ஏனெனில் நீர்மூழ்கி மூலமாக அணு குண்டுகள் செலுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை செலுத்தும் நீர்மூழ்கி கப்பல்கள் இப்போது கடலில் இல்லை. இவை வழக்கமான பராமரிப்பு காரணங்களுக்காகவும், பழுது நீக்கவும் துறைமுகங்களில் உள்ளன. எஞ்சிய சிலவும் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நீர்மூழ்கிகளின் அமைதியான செயல்பாடும் அச்சமூட்டுவதாக உள்ளது என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத் துமா இல்லை அத்திட்டத்தைக் கைவிடுமா என்பது, உண்மையில் அனைவரிடமும் தீவிர எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.