புதுடெல்லி: பாதுகாப்பு துறையில் ‘தற்சார்பை’ விரைவுபடுத்த மேலும் 101 ஆயுதங்கள் மற்றும் தளங்களை உள்நாட்டில் உருவாக்குவதற்கான முக்கிய கொள்கை முடிவு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய உபகரணங்கள் மற்றும் தளங்கள் அடங்கிய 101 பொருட்களின் மூன்றாவது நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்கள் துறை மூலம் அறிவிக்கப்பட்ட இந்தப் பட்டியல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுதியான ஆர்டர்களை பெறும் வகையில் உருவாக்கப்படும் கருவிகள் மற்றும் அமைப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. டிசம்பர் 2022 முதல் டிசம்பர் 2027 வரை படிப்படியாக இந்த ஆயுதங்கள் மற்றும் தளங்களை உள்நாட்டுமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2020-ன் விதிகளின்படி, உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து இந்த 101 பொருட்கள் வாங்கப்படும். முன்னதாக, ஆகஸ்ட் 21, 2020 அன்று முதல் பட்டியலும் (101), மே 31, 2021 அன்று இரண்டாவது பட்டியலும் (108) வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாவது பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 310 பாதுகாப்பு உபகரணங்களை உள்ளடக்கிய இந்த மூன்று பட்டியல்கள் ஆயுதப்படைகளின் தேவையை பூர்த்தி செய்ய சர்வதேச தரத்திலான உபகரணங்களை கொள்முதல் செய்வதில் உள்நாட்டு தொழில்துறையின் திறன்களில் அரசின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.
தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன்களில் புதிய முதலீட்டை ஈர்ப்பதன் மூலம் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் திறனை இது தூண்டும். ஆயுதப் படைகளின் போக்குகள் மற்றும் எதிர்காலத் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கு உள்நாட்டுத் தொழில்துறைக்கு இது ஏராளமான வாய்ப்புகளை வழங்கும்.
தொலை உணர்வு கருவிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், இலகுரக பீரங்கிகள், கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள், கப்பல்களுக்கான ரேடார், கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, நீருக்கடியில் செல்லும் வாகனம், ஆளில்லா விமானம், கதிரியக்க எதிர்ப்பு ஏவுகணைகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை மூன்றாம் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் இவை குறித்த தகவல்கள் உள்ளன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், “பிரதமர் நரேந்திர மோடியின் ‘தற்சார்பு இந்தியா’ இலக்கை அடைய அரசு மேற்கொண்டுள்ள முழு முயற்சிகளின் அடையாளம் தான் மூன்றாவது பட்டியல். இந்த புதிய பட்டியல் உள்நாட்டு தொழில்துறையின் வளர்ச்சியில் முக்கியமானதாக இருக்கும், நாட்டின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தித் திறனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), பாதுகாப்பு உற்பத்தித் துறை, சேவைத் தலைமையகங்கள் மற்றும் தனியார் தொழில்துறை போன்ற அனைத்து பங்குதாரர்களுடனும் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு இந்த மூன்றாவது நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய இரண்டு பட்டியல்களைப் போலவே, மூன்றாவது பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவும் கடைபிடிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, உள்நாட்டுத் தொழில்துறையின் பங்களிப்பை அதிகரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் மூலதனக் கொள்முதல் பட்ஜெட்டில் 68 சதவீதம் உள்நாட்டு கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.