வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மான்செஸ்டர்: ‘கடவுளின் கை’ உதவியால் கோல் அடித்த போது மாரடோனா அணிந்த ‘ஜெர்சி’ ஏலம் விடப்பட உள்ளது.
கால்பந்து ‘ஜாம்பவான்’ மறைந்த மாரடோனா 60. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் 4 முறை உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். 1986ல் அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பை வென்று தந்தார். இத்தொடரின் காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக, தனது இடது கையை பயன்படுத்தி, கோல் (51வது நிமிடம்) அடித்து சர்ச்சை கிளப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” அது கடவுளின் கை’ என்றார்.
அடுத்து, 55 வது நிமிடத்தில் 60 மீ., துாரத்தில் இருந்து ஐந்து இங்கிலாந்து வீரர்களை கடந்து சென்று ‘சூப்பர்’ கோல் அடித்தார். இது நுாற்றாண்டின் சிறந்த கோலாக போற்றப்பட்டது. போட்டி முடிந்த பின் தனது ‘ஜெர்சியை’ கழற்றி, இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹாட்ஜிடம் கொடுத்தார். இது கடந்த 20 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள தேசிய கால்பந்து மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது மாரடோனா அணிந்திருந்த 10ம் எண் கொண்ட ‘ஜெர்சி’,தற்போது ஏலம் விடப்பட உள்ளது.
இணையதள வழியில் நடக்கவுள்ள இந்த ஏலம், வரும் 20ல் துவங்குகிறது. இதில் ரூ. 40 கோடி முதல் ரூ. 60 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழங்கால பொருட்கள் சேகரிப்பு நிறுவனத்தின் தலைவர் பிராம் வாட்ச்சர் கூறுகையில்,” விளையாட்டு உலகின் மிக முக்கியமான நினைவுப் பொருள் மாரடோனா ஜெர்சி. அவர் கோல் அடித்த நிமிடம், விளையாட்டு வரலாற்றில் சிறந்த தருணம்,” என்றார்.
Advertisement