ஐ.நா. உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது “சட்டவிரோதம்” – ரஷியா

ஜெனீவா,
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 47 உறுப்பினர்களை கொண்டது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில். இதன் உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச்சபையின் 193 உறுப்பு நாடுகளால் மூன்றாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷியாவும் உறுப்பினராக இருந்தது. 
இந்த சூழலில், உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து, ரஷிஷ்யாவை நீக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்நிலையில் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ரஷியாவை நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தநிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷியாவை இடைநீக்கம் செய்யும் வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது. .
முன்னதாக மனித உரிமைகளை திட்டமிட்டு மீறும் நாடுகளின் உறுப்பினர் அந்தஸ்தை, ஐ. நா. பொதுச்சபையால் இடைநீக்கம் செய்யலாம் என்ற விதி உள்ளது. ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஒப்புதல் பெற, வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் பெரும்பான்மை தேவை என்ற நிலை இருந்தது. இதனையடுத்து 3ல் 2 பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவானதால் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை ரஷியா நிராகரித்துள்ளது. மேலும் இது “சட்டவிரோதமானது” என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக ரஷியா வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், இந்த இடைநீக்கம், “சுதந்திரமான உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் இறையாண்மை கொண்ட ஐ.நா. உறுப்பு நாட்டைத் தண்டிக்கும் நோக்கில் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை” என்று அதில் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.