சட்டத்திற்கு உட்பட்டு உளவு மற்றும் விசாரணைகள் முகமைகள் இடைமறித்து கேட்ட தொலைபேசி உரையாடல்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அழிக்கப்பட்டு விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சட்டப்பூர்வமாக ஒட்டுகேட்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்களை விசாரணை முகமைகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அழித்து விடும் என்ற தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2016 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரையிலான காலத்தில் 10 விசாரணை முகமைகள் ஒட்டுகேட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் நபர் ஒருவர் கேட்டிருந்தார். இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒட்டுகேட்பு தகவல்கள் அழிக்கப்பட்டு விடும் என்றும், இதனால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றும் கூறியுள்ளது. குற்றச்சம்பவங்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசின் பல விசாரணை முகமைகள் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM