டெல்லி : நாட்டு மக்களுக்கு தரமாகவும் குறைந்த செலவிலும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் ஒவ்வொருவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடனும் இருக்க வேண்டும் என விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையை சார்ந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக இன்றைய தினம் இருப்பதாகவும் அவர்களின் கடின உழைப்பு மூலமே நமது பூமி பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த எந்த ஒரு ஓய்வும் இன்றி மத்திய அரசு உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார். நமது மக்களுக்கு நல்ல தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதார வசதிகளை கிடைக்கச் செய்ய கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ கல்வி மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளதாகவும் பல்வேறு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவ கல்வியை உள்ளூர் மொழிகளில் படிக்கச் செய்ய நமது அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் மூலம், ஏராளமான இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.