கள்ளக்காதலுக்கு இடையூறு- ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற தாய்

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் அருகே குளக்கஞ்சி கோவில் விளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், ஒன்றரை வயதில் சரண் என்ற மகனும் இருந்தனர். நேற்று காலை வழக்கம்போல் ஜெகதீஸ் வேலைக்கு சென்றார். வீட்டில் கார்த்திகா குழந்தைகளுடன் இருந்தார். மாலையில் மகன் சரணுக்கு உடல்நிலை சரியில்லை என்று கணவருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.

பதட்டமடைந்த ஜெகதீஷ் வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது குழந்தை சரண் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

எனவே குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தக்கலை டி.எஸ்.பி. கணேசன் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஜெகதீஷ் வீட்டில் விஷப்பொடி பாக்கெட்டுகள் கிடந்தது தெரியவந்தது. இதனால் குழந்தையின் சாவில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் வீட்டில் இருந்த மற்றொரு குழந்தை சஞ்சனாவும் மயங்கி விழுந்தது. உடனே அவரையும் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தக் குழந்தையும் விஷம் சாப்பிட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கார்த்திகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மார்த்தாண்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கார்த்திகா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

 

போலீசார் கார்த்திகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது உறவினர் வீட்டுக்கு சென்றேன். அங்குள்ள கோவில் விழாவிலும் பங்கேற்றேன். அப்போது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த வாலிபர் என்னுடன் பேசுவதை தவிர்த்தார். அவரிடம் இதுபற்றி கேட்டபோது எனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதால் என்னுடன் பழகுவதை தவிர்ப்பதாக கூறினார்.

இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். நேற்று காலை எனது கணவர் வேலைக்கு சென்றார். வீட்டில் நானும் குழந்தைகளும் இருந்தோம்.

அப்போது நான் வாலிபரை தொடர்பு கொண்டேன். அவர், என்னுடன் பேச மறுத்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தேன். பின்னர் எனது கணவருக்கு போன் செய்து மகன் சரண் மயங்கி விட்டதாக கூறினேன். அவர் வந்து குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை விஷம் அருந்தியதை கண்டுபிடித்து கணவரிடம் கூறி விட்டனர்.

குழந்தை தின்பண்டம் என நினைத்து விஷத்தை அருந்தி இருக்கலாம் என கூறினேன். ஆனால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.