ரஜோரி: ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் கதுரியன் பஞ்சாயத்து டிராம்மன் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்புப் படிக்கும் இந்து சிறுமி ஒருத்தி நெற்றியில் குங்குமம் அணிந்து வந்தாள். முஸ்லிம் சிறுமி ஒருத்தி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தாள். அவற்றை பார்த்த ஆசிரியர் நிசார் அகமது, மதச் சின்னங்களுடன் வகுப்பறைக்கு வந்த சிறுமிகளை அடித்துள்ளார்.
இதுகுறித்து 2 சிறுமிகளும் தங்கள் பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களின் பெற்றோர் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவின் அடிப்படையில் ரஜோரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று ஆசிரியர் நிசார் அகமதுவிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், அவர் பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஆசிரியர் நிசார் அகமதுவை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால், அந்தச் சம்பவம் தொடர்பாக மத ரீதியாக நடத்தப்பட்டதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை’’ என்றனர்.