குஜராத் மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தந்தை உயிரிழந்த அடுத்த சில மணி நேரங்களில் அவரது குழுந்தைகள் பொது தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் நகரில் நடைபெற்றுள்ளது. அந்த நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் நிதின்பாய் பிரஜாபதி. தனியார் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று உள்ளூரில் நடைபெற்ற விசேஷம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. திங்கள் அன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். அன்றைய தினம் அவரது மகன் மற்றும் மகளுக்கு பொதுத் தேர்வு இருந்துள்ளது.
அவர்கள் இருவரும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள். தன் குழந்தைகளை மருத்துவக் கல்வி பயிலச் செய்ய வேண்டும் என்பது நிதினின் கனவாக இருந்துள்ளது. அதனால் தந்தை உயிரிழந்த துக்கத்தை தங்கள் மனதுக்குள் புதைத்துக் கொண்டு அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் தேர்வு எழுத சென்றுள்ளனர்.
தந்தை உயிர் நீத்திருந்தாலும் அவரது கனவுக்கு உயிர் கொடுக்கும் வகையில் குழந்தைகள் இருவரும் தேர்வு எழுதி முடித்துள்ளனர். அதன் பிறகே அவருக்கான இறுதி சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. அவரது மகன் சடங்குகளை செய்துள்ளார்.