கடந்த எட்டு மாதங்களில் லடாக் அருகே உள்ள இந்திய மின்சார விநியோக மையங்களைச் சீன அரசின் உதவியில் இயங்கும் ஹேக்கர்கள் குறிவைத்துள்ளதாகத் தனியார் உளவுத்துறை நிறுவனமான `ரெக்கார்ட் ஃபியூச்சர்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக `ரெக்கார்ட் ஃபியூச்சர்’ உளவுத்துறை நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லைப் பகுதியிலுள்ள சுமார் 7 மின்சாரக் கட்டமைப்புகளை ஹேக்கர்கள் சிலர் சீன அரசின் உதவியுடன் ஹேக் செய்து, சைபர் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
அதேபோல, சமீபத்தில் இந்தியாவின் 7 மாநிலங்களில் மின்சாரக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இணையவழி ஊடுருவல் நடந்திருப்பதையும் நாங்கள் கவனித்தோம்.
இந்தத் தாக்குதல்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய இணையவழி ஊடுருவல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் அனைத்தையும் ஹேக்கர்கள் சீன அரசுக்கு அனுப்பியிருப்பதையும் நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். எங்களின் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து இந்திய அரசை எச்சரித்தோம். ஆனால், இந்தியா இது தொடர்பாக எங்களுக்குப் பதிலளிக்கவில்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.