புதுடெல்லி: டிஎன்ஏ தொழில்நுட்பம் (பயன்பாடு மற்றும் நடைமுறை) ஒழுங்குபடுத்துதல் வரைவு மசோதா பரிசீலனையில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், “நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டிஎன்ஏ பகுப்பாய்வு, சைபர் தடயவியல் மற்றும் தொடர்புடைய வசதிகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை ‘டிஎன்ஏ தொழில்நுட்பம் (பயன்பாடு மற்றும் நடைமுறை) ஒழுங்குபடுத்துதல் மசோதாவை உருவாக்கியுள்ளது. டிஎன்ஏ விவரங்களைச் சேமிப்பதற்காக நாடு முழுவதும் டிஎன்ஏ தரவு வங்கிகளை அமைப்பதற்கான ஏற்பாடு பரிசீலனையில் உள்ளதாக வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஎன்ஏ அடிப்படையிலான தடயவியல் தொடர்பான வழக்குகளில் தரப்படுத்தலை உறுதி செய்வதற்காக உயிரியல் மற்றும் டிஎன்ஏ-க்கான பணி நடைமுறை கையேடுகளையும், தடயவியல் சேகரிப்புக்கான வழிகாட்டுதல்களையும் தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
திறன் மேம்பாட்டிற்காக, வழக்கு விசாரணை அதிகாரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தடயவியல் சான்றுகளை சேகரிப்பது மற்றும் பாலியல் வன்கொடுமை சான்று சேகரிப்பு முறையில் உள்ள நிலையான கூறுகள் குறித்து 23,233 புலனாய்வு அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
சண்டிகரில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் உள்துறை அமைச்சகத்தால் அதிநவீன டிஎன்ஏ பகுப்பாய்வு ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.