டார்க் பிரவுசர்… ‘வலிமை’ படத்தின் கதைக்கருவே இந்த டிஜிட்டல் உலகின் கறுப்புப் பக்கத்தையும், அதன் மூலம் நடக்கும் போதைப் பொருள் விநியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாகவே வளர்ந்த, போதைப் பொருள்களின் உற்பத்தி மையங்களாக இருந்த நாடுகள் மட்டுமே அறிந்திருந்த டார்க் பிரவுசர் பயன்பாடு தமிழகத்தில் தற்போது அதிகரித்துள்ளது. ‘வலிமை’ படத்தின் வழியாகச் சொல்லப்பட்ட இந்த டார்க் பிரவுசர் குறித்த விவரங்களை இப்போது தமிழகக் காவல்துறையும் துருவ ஆரம்பித்துள்ளது.
இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் போதைப்பொருள்களை மாஃபியாக்கள் கடத்தி வந்து, அதைச் சில ஏஜென்ட்கள் மூலம் கல்லூரிப் பகுதிகள், ஹோட்டல்களில் விற்பனை செய்வதாக மட்டுமே காட்சிகள் இருந்துள்ளன. ‘வலிமை’ படத்தில்தான் இளைஞர்கள் நேரடியாக டார்க் பிரவுசர் மூலம் தங்களுக்குத் தேவைப்படும் போதைப்பொருள்களை வாங்குவதோடு, அந்த போதைக்கு அவர்களை அடிமையாக்கி அந்த டார்க் பிரவுசர் மூலமே அவர்களைக் கொலைசெய்ய வைப்பதாகக் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘திரைப்படத்திற்காக சென்னையில் இப்படி ஒரு போதைக் கும்பல் சுற்றுவதாகக் கதை அமைத்தீர்களா?’ என்ற கேள்வியை ‘வலிமை’ படத்தின் இயக்குநர் வினோத்திடம் முன்வைத்தேன்.
“நான் ‘வலிமை’ திரைப்படத்தில் காட்டிய டார்க் பிரவுசர் இணையதளங்கள் பல ஆண்டுகளாகவே வெளிநாடுகளில் செயல்பட்டு வருபவைதான். இப்போது சென்னை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் அந்த இணையதளங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள்களை வாங்க ஆரம்பித்துள்ளார்கள். இதுகுறித்த நீண்ட ஆய்வுக்குப் பிறகுதான் இந்தத் திரைப்படத்தின் கதைக்கருவையே நாங்கள் உருவாக்கினோம்” என்கிறார் அவர்.
‘வலிமை’ படத்தில் இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கிய பிறகு மோசமான தவறுகளையும் செய்யத் துணிந்திருப்பதைக் காட்சிகளாகக் காட்டியிருந்தார்கள். அதே நேரம் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களும், 20 வயதைத் தாண்டாத இளைஞர்களும் பாலியல் வழக்குகளிலும், கொலை வழக்குகளிலும் சிக்கி வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விருதுநகரில் நடந்த பாலியல் சம்பவங்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல சமூக விரோதச்செயல்களில் பள்ளி மாணவர்களே ஈடுபட்டதும், அவர்கள் போதைக்கு அடிமையாகியிருப்பதையும் காவல்துறை உறுதி செய்தது. இதுதவிர பள்ளிக்கூடத்திற்கே போதையுடன் வந்து ஆசிரியையை மிரட்டிய சம்பவங்களும் தமிழகத்தில் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2019-ம் ஆண்டைவிட கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் இடையே போதைப்பொருள்கள் அதிகமாகப் புழங்குவதும், குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுவது அதிகரித்திருப்பதும் சமூகநலன் குறித்து நடந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கொங்குமண்டலத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் கொரோனா கால விடுமுறைகளில் புதுவகை போதைப்பொருள்களுக்கு அடிமையாகியிருப்பதைக் காவல்துறை உறுதி செய்தது. சிகரெட், மதுபானம், கஞ்சா ஆகியவற்றைத் தாண்டி இப்போது ஊசியின் வழியாகவும், மாத்திரை வடிவிலும் போதைப்பொருள்களை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊசிகள் மற்றும் மாத்திரை மூலம் போதைப்பொருள்களை உட்கொள்ளும் இளைஞர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க, அது சட்டம் ஒழுங்கிலும் பிரச்னையாக மாற ஆரம்பித்தது.
இது ஒருபுறம் என்றால், இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாக உள்ள சென்னையிலோ, கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் புழங்கும் போதைப்பொருள்கள் எல்லாம் சர்வசாதாரணமாக இளைஞர்கள் வசம் இருக்கிறது. குறிப்பாக ஈ.சி.ஆர் சாலையில் வார இறுதி நாள்களில் நடக்கும் பார்ட்டிகளில் இந்த உயர்ரக போதைப்பொருள்கள் பயன்பாடு சரளமாக இருக்கிறது. அதேபோல் பிரைவேட் பார்ட்டி என்கிற பெயரில் தனியாக வீடுகளில் நடத்தப்படும் கொண்டாட்டங்களின்போதும், இந்த உயர்ரக போதைப்பொருள்களைப் பயன்படுத்தித் தள்ளாட்டம் போடுவது சென்னையில் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ‘வலிமை’ படம் சுட்டிக்காட்டிய டார்க் பிரவுசர் மூலம் போதைப்பொருள்கள் வாங்குவது சென்னையில் இருப்பதை உணர்ந்து, அதுகுறித்தும் போதைப்பொருள்கள் புழக்கம் குறித்தும் காவல்துறை சில தகவல்களைத் திரட்டியிருக்கிறது. இதன்பிறகே சில தினங்களுக்கு முன்பாக தமிழகக் காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு, ‘ஆபரேஷன் கஞ்சாவேட்டை 2.0’ என்ற பெயரில் ஒரு மாதம் கஞ்சா வேட்டைக்கும் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா, குட்கா ஆகியவற்றைத் தாண்டி எல்லா போதைப்பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தும் ஆப்ரேஷனாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
‘கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி ரகசியத் தகவல் சேகரிக்க வேண்டும். பார்சல் மற்றும் மாத்திரை போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களைத் தனிப்படை அமைத்துக் கண்காணித்துக் கைது செய்ய வேண்டும்’ என்று இந்த ஆப்ரேஷனுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதைத் தாண்டி, போதையளிக்கும் சிலவகை மனநல மருந்துகள் விற்பனையை மருந்தகங்கள் நெறிமுறைப்படுத்த வேண்டும் என்றும் ரகசிய உத்தரவு போயிருக்கிறதாம்.
‘போதைப்பொருள் விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் அதன் புதிய பரிணாமமாக மாறியுள்ள டார்க் பிரவுசர் குறித்தும் ஆராயப்படுமா?’ என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டேன். “டார்க் பிரவுசர் குறித்த தகவல்கள் ஏற்கெனவே காவல்துறை வசம் உள்ளன. ஆனால் அந்த இணையதளங்களை பிற இணையதளங்கள் போல் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. போதைப்பொருள்களை சப்ளை செய்யும் கும்பல் எல்லாம் வெளிநாடுகளில் உள்ளன. அதை வாங்கும் நபர்கள் இங்கிருக்கிறார்கள்.இதுபோன்ற இணையதளங்களில் ஒன்றை முடக்கினால், மற்றொரு பெயரில் செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனாலும் சைபர் க்ரைம் மூலம் தமிழகத்தில் எங்கிருந்தெல்லாம் டார்க் பிரவுசர் செயல்படுகிறது என்கிற விவரங்களை ஆராய்ந்துவருகிறோம். இந்த இணையதள போதைப்பொருள் விநியோகத்தை காவல்துறை மட்டுமே தடுக்கமுடியாது. அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே தடுக்கமுடியும். இப்போது நடந்துவரும் போதைப்பொருள் தடுப்பு ஆப்ரேஷனில் இந்த டார்க் பிரவுசரும் இடம்பெறுள்ளது” என்கிறார்.
டார்க் பிரவுசர் இணையதளங்கள் எப்படிச் செயல்படுகின்றன? “சாதாரண இணையதள பிரவுசர் மூலம் இந்த வெப்சைட்களுக்குச் செல்ல முடியாது. இதற்காக பிரத்யேக பிரவுசர்கள் உள்ளன. அதை உங்கள் கணினியில் பதிவேற்றிய பிறகுதான், இதுபோன்ற இணையதள பக்கங்களுக்குள் செல்லமுடியும். இந்தியாவில் டார்க் பிரவுசர் பயன்படுத்துவது சட்டவிரோதம் இல்லை. ஆனால், அந்த இணையதளங்கள் மூலம் எல்லா சட்டவிரோதச் செயல்களும் நிகழ்கின்றன.
சட்டவிரோதப் பொருள்கள் விற்பனை, சட்டவிரோதச் செயல்களுக்கான திட்டமிடல், போலித் தயாரிப்புகளை விற்பது என்று இவற்றின் நெட்வொர்க் பயங்கரமானது. உலகம் முழுக்க சுமார் 75,000-க்கும் மேற்பட்ட இப்படிப்பட்ட கறுப்பு இணையதளங்கள் சட்டவிரோத வர்த்தகங்களைச் செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது. சில்க் ரோடு, எம்பயர் மார்க்கெட் போன்றவை இதில் முன்னோடிகள். சில்க் ரோடு இணையதளத்தை உருவாக்கிய ராஸ் உல்ப்ரிக்ட் என்பவரை அமெரிக்க எஃப்.பி.ஐ போலீஸார் கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்தனர். அப்போது அந்த இணையதளம் முடக்கப்பட்டது. உல்ப்ரிக்ட்டுக்கு அமெரிக்க அரசு பரோலில்கூட வெளிவர முடியாத இரட்டை ஆயுள் தண்டனையும், அதன்பின்னர் கூடுதலாக நாற்பது ஆண்டுகளும் சிறைத் தண்டனையாக விதித்தது.
ஆனால், அதன்பின் அதேபோன்ற ஏராளமான இணையதளங்கள் வந்துவிட்டன. குறிப்பாக, பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் பெருக்கத்துக்குப் பிறகு இப்படிப்பட்ட இணையதளங்கள் அதிகரித்துவிட்டன. இந்த இணையதளங்கள் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதையோ, இவற்றில் நுழையும் ஒருவரின் ஐ.பி.அட்ரஸ் குறித்த தகவலையோ யாரும் கண்டறிய முடியாது” என்று அதிர வைக்கிறார்கள், இதன் தொழில்நுட்பம் அறிந்த சிலர்.
இந்த இணையதளப் பக்கங்களை நாம் ஆராய்ந்தபோது உலகின் விலையுயர்ந்த போதைப்பொருள்கள் எல்லாம் கலர்கலர் படங்களுடன் காட்சிதருகின்றன. ஒரு கிராம் முதல் பத்து கிராம் வரை என பேக் செய்யப்பட்டு, ஒவ்வொரு பேக்கும் எவ்வளவு விலை என்பதை அமெரிக்க டாலர்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.இந்திய ரூபாய் மூலம் இந்த போதைப்பொருள்களை வாங்கமுடியாது. சில இணையதளங்களில் பிட் காயின் இருந்தால் மட்டுமே போதைப்பொருள்களை வாங்கமுடியும்.
பிட்காயின் மூலம் பணப்பரிமாற்றம் நடப்பது தங்களுக்குப் பாதுகாப்பு என போதைப் பொருள்களை சப்ளை செய்யும் கும்பல் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஒருமுறை ஆர்டர் செய்யும்போது ஷிப்மென்ட் அர்ஜெண்டினா என்று காட்டும், அடுத்த முறை செய்தால் ஆஸ்திரேலியா என்று காட்டும். உண்மையில் எங்கிருந்து இந்த போதைப்பொருள் சப்ளையாகிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியாது. டார்க் பிரவுசரைப் போலவே இந்த போதைக்கும்பல் விவரங்களும் கறுப்புப் பக்கமாகவே இருக்கிறது.
போதைக்கு அடிமையான ஓர் இளைஞர், வீட்டில் இருந்துகொண்டே டார்க் பிரவுசர் மூலம் இப்படிப்பட்ட இணையப்பக்கத்தில் சென்று தேவைப்படும் போதைப்பொருளையும், தேவையான அளவையும் குறிப்பிட்டுப் பணத்தைக் கட்டிவிட்டால் போதும்… அடுத்த பத்து நாள்களில் வீட்டு முகவரிக்கு அழகுசாதனப் பொருள்கள் அடங்கிய பார்சல் வந்து சேரும்.அல்லது கலைப்பொருள்கள் அடங்கிய பார்சலாக வரும். அந்த பார்சலின் உள்ளே ரகசியமாக போதைப்பொருள் இருக்கும். வீட்டில் இருப்பவர்களாலேயே இதைக் கண்டறியமுடியாது. “போதைப்பொருள்களை வாங்க எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம் மாறி, வீட்டிற்கே போதைப்பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்கும் ஆபத்தான டெக்னாலஜியாக இந்த டார்க் பிரவுசர் மாறியிருப்பதால், இளைஞர்கள் பலரும் இதற்கு அடிமையாகிவருகிறார்கள்” என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.
விற்பவர் வெளிநாட்டில் இருக்கிறார், வாங்குபவரோ அழகுசாதனப் பொருள்களை ஆர்டர் செய்வதாக வீட்டில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அந்தப் பொருள்களுக்குள்ளே அழகை மட்டுமல்ல, ஆளையே கொல்லும் போதைப்பொருள்கள் புதைந்துகிடப்பதை யார் கண்டறியமுடியும்..? இந்தச் சிக்கல்தான் இப்போது காவல்துறைக்கும் உள்ளது. ‘‘ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் எந்த பார்சலில் என்ன வருகிறது என்பதை எப்படிக் கண்டறிய முடியும்?” என்று புலம்புகிறார்கள் போலீஸ் அதிகாரிகள். அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, டென்மார்க், இங்கிலாந்து போன்ற டெக்னாலஜியில் வளர்ந்த நாடுகளில் டார்க் பிரவுசர் பயன்பாடுகள் பெருமளவில் கண்காணிக்கப்படுகின்றன. கள்ளச்சந்தையில் சட்டத்துக்குப் புறம்பான பொருள்கள் விற்பவர்களின் சொர்க்கபுரியாக மாறியிருக்கிறது இந்தியா போன்ற வளரும் தேசங்கள் என்பதுதான் மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயம். மூலிகை மருந்துகள் என்னும் போர்வையில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான amphetamine என்னும் போதைப் பொருளினை ஐரோப்பாவுக்கு அனுப்பமுயன்ற ஹரித்வாரைச் சேர்ந்த குழுவை இந்திய அதிகாரிகள் கைது செய்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
உலகில் இளம்வயதினர் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.ஆனால் அவர்களே இந்தச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறாமல் இருக்கவேண்டும். அதற்கு இதுபோன்ற கள்ளத்தனமான இணையதளப்பக்கங்களுக்கு முடிவுரை எழுதவேண்டும் என்பதே எதிர்கால சமூகத்திற்கு நல்லது!