கரூர்:
கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெட்ரோல்பங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அதிக அளவில் உயிரிழப்புகள் நடக்கும் மாவட்டமாக கரூர் மாவட்டம் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற வார்த்தைகளில் உள்ள ஆழமான அர்த்தத்தை அனைவரும் உணர வேண்டும்.
இந்த உலகிலேயே விலைமதிப்பில்லாதது மனித உயிர்கள் மட்டுமே. எனவே, அனைவரின் நலன் கருதியும் கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், இதனை அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒரு இயக்கமாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 18.04.2022 முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உணவகங்கள், ஜவுளி, நகைக்கடைகள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள் என எந்த ஒரு இடத்திற்கும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து பகுதிகள், நிறுவனங்களின் முகப்புகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். இச்செய்தி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் யாருக்கும் பெட்ரோல் வழங்கக்கூடாது. மேலும், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் பெட்ரோல் வழங்க கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் இருக்கை பட்டை அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களே. எனவே, தனியார் நிறுவனங்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருவோரை பணியாற்ற அனுமதிக்க கூடாது. தலைக்கவசம் விற்பனை நிலையங்களில் வருவாய் கோட்டாட்சியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை உறுதிசெய்திட வேண்டும். தரமற்ற வகையிலான தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
அரசு மதுபானக்கடைகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக்கூடாது. இதுகுறித்து அனைத்து மதுபானக் கடைகளிலும் அறிவிப்பு பதாகை வைக்கப்பட வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் இந்த உயிர்க்காக்கும் இயக்கத்தால், ஒரு உயிர் காப்பாற்றப்பட்டாலும் நமக்கு வெற்றியே. கரூர் மாவட்ட காவல் துறையால் 1.1.2022 முதல் தற்போது வரை தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 75,534 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வருகின்றார்கள் என்ற நிலையினை கரூர் மாவட்டத்தில் நாம் அனைவரும் உருவாக்க வேண்டும். 18.04.2022க்குப் பிறகு அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.