தமிழகத்தை கர்நாடகாவோடு இணைக்கும் முக்கியமான சாலைகளில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலை 948ல் பண்ணாரி முதல் காரப்பள்ளம் வரையிலான 22 கி.மீ பாதையை இரவு நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. 2019ம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவை உடனே பின்பற்றும்படி கடந்த மாதம் 08ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் பிப்ரவரி 10ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். சோளகர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வசிக்கும் இப்பகுதியில் பழங்குடி மக்களின் விருப்பத்தை கலந்தாலோசிக்காமல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது என்று கூறி கிராம பஞ்சாயத்தில் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
திம்பம் இரவு நேர போக்குவரத்து தடை: காய்கறிகளை குப்பையில் கொட்டும் அவலம்; நஷ்டமடையும் விவசாயிகள்
மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரையிலான தடை, இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரையாக மாற்றப்படுகிறது.
12 சக்கரங்கள் அல்லது அதற்கு மேல் சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் திம்பம் மலைச்சாலையில் எப்போதும் செல்ல கூடாது என்ற தடையை அறிவித்துள்ளது உயர் நீதிமன்றம்,
அதே போன்று 16.2 டன்கள் எடை கொண்ட வாகனங்களுக்கும் முழுமையாக அனுமதி மறுக்கப்படுகிறது.
16.20 டன்களுக்கு குறைவான எடை கொண்ட 10 சக்கரங்களை கொண்ட வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சமவெளிப் பகுதிகளில் அதாவது பண்ணாரி செக்போஸ்ட்டில் துவங்கி திம்பம் மலையேற்றப் பகுதி வரையிலான மூன்று கிலோ மீட்டர் சாலையில் மணிக்கு 30 கி.மீ என்ற வேகத்திலும், அதன் பின்னர் அங்கிருந்து காரப்பள்ளம் வரையிலான 23 கி.மீ பாதையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் என்ற வேகத்திலும் செல்ல வேண்டும்.
சாலை பயன்பாடு துவங்கி வெளியேற்றம் வரை ஆகும் நேரம் குறித்து வைக்கப்பட்டு சராசரி நேரம் கணக்கிடப்படும். கணக்கிடப்படும் சராசரி நேரத்தை மீறும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பொது போக்குவரத்து பேருந்துகள், மினி பஸ்கள் போன்றவை காலை 6 மணி துவங்கி இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்.
இரவு 9 மணிக்கு மேல் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல தடை தொடரும்
பால் வாகனங்களுக்கு எந்த விதமான தடையும் இல்லை.
ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள், பழங்குடி கிராமங்களுக்கு செல்லும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தடை ஏதும் இல்லை. முழு நேரமும் அவசர சேவையை வழங்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களும் 30 கி.மீ என்ற வேகத்தையே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மொத்தம் உள்ள 27 கி.மீ பாதையிலும் 5 கி.மீக்கு ஒரு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். மின்சார வசதி இல்லாத இடத்தில் சோலார் பேனல் கொண்டு இயக்கப்படும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.