அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் கண்டாசா அருகே உள்ள ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம் பகதுர்சிங். சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் அவரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் ஷியாம் பகதூர் சிங்கை சரமாரியாக தாக்கினார்கள். அதில் ஒருவர் கைத்துப்பாக்கியால் மிரட்டி, அவர் வைத்து இருந்த ரூ1.லட்சம் ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறித்தனர். இதனால் உதவி கேட்டு பகதூர் ஷியாம் சிங் சத்தம் போட்டார். இதைகேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர்.
இதை பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அவர் கோட்வாலி போலீசில் புகார் செய்தார். அதில் அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ ராம் சந்திரயாதவ் மகன் அலோக் யாதவ் இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அவர் தான் காரை ஓட்டிவந்ததாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்த பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் எம்.எல்.ஏ. மகன் அலோக் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.