பியொங்யாங்: வட கொரியா அடுத்த வாரம் அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் வட கொரியா தனது தேசத்தின் 110-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக வட கொரியா அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. வட கொரியாவின் கொள்கைகள் குழு சிறப்புப் பிரதிநிதி ‘சுங் கிம்’ இதனை உறுதி செய்துள்ளார். “நான் இது குறித்து விவரமாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் அணு ஆயுத ஏவுகணை சோதனை நடைபெறலாம்” என அவர் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தான் வட கொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியா மீது அணு ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், வட கொரியா அடுத்த வாரம் அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற செய்தி தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளையும் தாண்டி வட கொரியா அணு ஆயுத சோதனையை கைவிடாமல் தொடர்ந்து வருகிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில் பெரிதாக எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.