அமராவதி: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில் தேர்தலுக்கு தயாராகும் வண்ணம் அமைச்சர்களை மாற்ற முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதற்காக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்று அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தயாராகும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக ஆந்திராவில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 13 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. மொத்தம் 26 மாவட்டங்கள் அமைக்கப்ப்டடுள்ளன. இதனைத் தொடர்ந்து அமைச்சரவையையும் மாற்றியமைக்க அவர் முடிவு செய்துள்ளார். வரும் 11-ம் தேதி புதிய அமைச்சரவையை மாற்றியமைக்கப்படுகிறது.
இதில், புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்க அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து துணை முதல்வர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு ஏதுவாக தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சரவையை மாற்றியமைக்கும் வகையில், புதிய அமைச்சர்களின் பட்டியல் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பழைய அமைச்சர்களில் 2 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. மற்ற அனைவரும் புதியவர்களாக இருப்பர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.