சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, மரகதம் குமரவேல், தங்கபாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோர், ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இவற்றுக்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
30 ஆயிரம் பேருக்கு ஓர் ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் 2 சுகாதார மையங்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவெளி 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின், மத்திய அரசு சார்பில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொலைதூரக் கிராமங்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் வகையில், ஒரு வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு களப் பணியாளர், ஒரு மருந்தாளுநர் என 4 பேர் கிராமங்களுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 8-ம் தேதி (நாளை) தொடங்கிவைக்கிறார். தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும் 389 வாகனங்கள் செல்லும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.