டெல்லி: வழி தெரியாதவர்களுக்கு வழியை காட்டுவதில் முன்னணியில் உள்ளது கூகுள்மேப். நகர்ப்புறங்களில் இன்று பெரும்பாலோர் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எளிதாக செல்ல கூகுள் மேப் பெரிதும் உதவிக்கமாக திகழ்கிறது.
இந்த கூகுள் மெப் செயலில் புதிய அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. இதன்மூலம் நாம் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, அடுத்து எந்த இடத்தில் டோல் வருகிறது, அங்கு வசூலிக்கப்பட உள்ள கட்டணம் எவ்வளவு என்பதுவரை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
டிஜிட்டலின் அசூர வேக வளர்ச்சி இன்று எவ்வளவுக்கெள்ளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அழிவு பாதைக்கும் வழிவகுக்கிறது. இருந்தாலும் கொரோனா காலக்கட்டமாக கடந்த இரு ஆண்டுகளில் இணையதளமே அனைத்து தரப்பினருக்கும் ஆபாந்தவானாக திகழ்ந்தது என்பதையும் மறுக்க முடியாது. கல்வி முதல் சாப்பாடு வரை அனைத்துக்கும் இணையதளவசதி பெரும் உதவிக்கரமாக திகழ்ந்தது. அதே வேளையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இணையதள உலகமே கதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவலங்களும் அரங்கேறி உள்ளன. இதனால் மற்றொரு புறம், அசம்பாவிதங்களும், வன்முறைகளும், பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
கால ஓட்டத்தின் தேவைக்கேற்ப மக்களோடு மக்களாக கலந்துவிட்ட கூகுள், தற்போது தனது மேப் செயலியை மேம்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணத்தை முன்கூட்டியே அறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் காரில் பயணிக்கும் பயனர்கள், தாங்கள் புறப்படும் இடம் மற்றும் சென்று சேர வேண்டிய இடத்தை கூகுள் மேப்பில் குறிப்பிட்டால், எங்கெங்கு சுங்கச்சாவடிகள் உள்ளது, அங்கு செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு, மொத்தம் எவ்வளவு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற தகவல்களை முன்கூட்டியே பெறமுடியும்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கூகுள், மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்பில், உள்ளூர் சுங்கக் கட்டணம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் சுமார் 2ஆயிரம் சுங்கச்சாவடிகள் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், சுங்கச்சாவடி இல்லாத கட்டணமில்லா வழிகளையும் காண்பிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் வாகன ஓட்டிகள் பயணங்களை சிறப்பாக திட்ட மிட உதவும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற அம்சங்கள் கொண்ட அப்டேட் இந்தியா மட்டுமின்றி, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் விரைவில் வெளியாக உள்ளதாக வும், கூகுள் செயலியின் புதிய அப்டேட் ஏப்ரல் 15ந்தேதி பிறகு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.