பத்திரிகையாளர்களை அரை நிர்வாணமாக நிற்க வைத்த போலீஸ்!

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். ஆனால், அண்மைக்காலமாக
பத்திரிகையாளர்கள்
மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பத்திரிகையாளர்கள் அதிகம் கொலை செய்யப்பட்ட நாடுகளில் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொலை மட்டுமல்ல, தாக்குவது, மிரட்டுவது, ஆபாசமாகத் திட்டுவது எனப் பல வகையான வன்முறைகளும் இங்கு நிகழ்ந்து வருகின்றன.

பேச்சு, கருத்து, எழுத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்தாலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்களை போலீசார் அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்தவர் கனிஷ்க் திவாரி. பத்திரிகையாளரான இவர் உள்பட சிலர் யூ-டியூப் சேனல் நடத்தி வருவதுடன் சில பத்திரிகைகளுக்கு ஃப்ரீலான்சிங் முறைப்படி கட்டுரையும் எழுதி வருகிறார். இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு எதிராக செய்தி எழுதியதாக
கனிஷ்க் திவாரி
உள்பட சுமார் 8 பத்திரிகையாளர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற அம்மாநில போலீசார், அவர்களை காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். மேலும், அவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

காவல் நிலையத்தில் தங்களை அரை நிர்வாணமாக நிற்க வைத்து அது சம்பந்தமான புகைப்படத்தை எம்.எல்.ஏ.வுக்கும், அவரது மகனுக்கும் போலீசார் அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டும் கனிஷ்க் திவாரி, எம்எல்ஏவுக்கு எதிராக கடந்த காலங்களில் செய்தி எழுதியதாகவும், காவல்நிலையத்திற்குள் போதைப்பொருள் பற்றி ஏற்கனவே செய்தி வெளியிட்டதால் காவல் நிலைய பொறுப்பாளரும் தன் மீது கோபத்தில் இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மீண்டும் செய்தி எழுதினால், அரை நிர்வாணமாக நகர் முழுவதும் அழைத்துச் செல்வோம் என்றும் பத்திரிகையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.