பத்து ரூபாய்
நாணயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுப்ரமணிய சிவா, “படப்பிடிப்புக்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று வருகிறேன். பெரும்பாலான இடங்களில், பெட்டிக்கடை முதல் பெரிய மால்கள் வரை – பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை என்றார்.
மேலும், நம்மைப் போன்றவர்கள் வேறு பணம் வைத்திருப்போம்; அல்லது ஏ.டி.எம். கார்டு, கூகுள் பே கைவசம் இருக்கும். ஆனால்
ஏழை மக்கள்
என்ன செய்வார்கள்? சமீபத்தில் வறியவர் ஒருவரிடம், சில, பத்து ரூபாய்
நாணயங்கள்
மட்டுமே இருக்க, உணவகங்களில் அவற்றை ஏற்காததால், பசியோடு அலைந்த திரிந்த சம்பவம், சமூகவலைளங்களில் கூட வெளியானதை வேதனையுடன் தெரிவித்தார். அதே போல, பெரும்பாலான பேருந்துகளிலும் இந்த நாணயத்தை நடத்துனர்கள் வாங்குவதில்லை. வேறு ரூபாய்கள் இல்லாத ஏழை மக்கள் என்ன செய்வார்கள்?” என்றார், வருத்தத்துடன்.
சுப்ரமணிய சிவா
10 ரூபாய் நாணயம் ஏன்?
கடந்த 2005ம் ஆண்டுதான் முதன்முதலாக பத்து ரூபாய் நாணயங்கள், ரிசர்வ் வங்கியால் வெளியடப்பட்டன. ‘பத்து ரூபாய் தாள்களைவிட, நாணயங்களுக்கு ஆயுட் காலம் அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு’ என்றது
ரிசர்வ் வங்கி
. அடுத்து, 2009 மற்றும் 2011ல் வடிவமைப்பு மீண்டும் மாற்றப்பட்டது. இப்படியாக தற்போதுவரை 14 வடிவங்களில் இந்த 10 ரூபாய் நாணயங்கள் கிடைக்கபெறுகின்றன.
‘செல்லாமல் போவதற்கு’ காரணம் என்ன?
முதன் முதலில் இந்த நாணயம் செல்லாது என மக்கள் நினைக்க காரணம், போக்குவரத்துத் துறை ஊழியர்கள். அதாவது பேருந்து நடத்துனர்கள். “பத்து ரூபா காயின்கள்தான் வச்சிருக்கியா.. இறங்கு” என எந்தவித காரணமும் சொல்லாமல் – நிர்தாட்சண்யமாக – பயணிகளை இறக்கிவிட்டனர், ஆகப்பெரும்பாலான நடத்துனர்கள். இது குறித்த செய்தி பரவிய பிறகு, “போக்குவரத்து கழகத்தின் வசூல் பிரிவில், பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவது இல்லை!” என காரணம் சொல்லப்படுகிறது.
வசூல் பிரிவினரோ, “வங்கிகளில் இந்த நாணயங்களை வாங்குவதில்லை” என அங்கே கைகாட்டினர். வங்கி அலுவலர்கள், “இந்த நாணயங்களை எண்ணுவதில் சிரமம் இருக்கிறது. ஒரு லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயம் கொண்டுவரப்பட்டால், பத்தாயிரம் நாணயங்கள் இருக்கும். ஏற்கனெவே வேலைப் பளுவில் இருக்கும் ஊழியர்கள், இவற்றை எண்ணுவதில் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். தவிர, இந்த நாணயங்களை, வங்கி லாக்கரில் வைத்து பாதுகாப்பதும் பெரும்பாடு!” என்கிறார்கள்.
இப்படி வங்கிகள் மறுக்க, இதைத் தொடர்ந்து போக்குவரத்து நிர்வாகம் – ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்கள் மறுக்க, ‘செல்லாது’ வதந்தி பரவிவிட்டது. இதன் வெளிப்பாடுதான், நடத்துனரோ, கடைக்காரரோ கொடுத்தால், பொது மக்கள் பலரும்கூட இந்த நாணயத்தை வாங்குவது கிடையாது.
போலி நாணயங்கள் ஊடுருவலா?
“பத்து ரூபாய் நாணயங்களில் போலிகள் ஊடுருவிவிட்டன. அதாவது, கள்ள நாணயம் புழங்குகிறது என்ற அச்சமும் மக்களிடையே பரவியது. இதை ரிசர்வ் வங்கி மறுத்தது. மேலும், “ஒரிஜினல் ரூபாய் நோட்டைவிட அதிக ‘மதிப்பிலான’ நோட்டுக்களையே சமூகவிரோதிகள் அச்சிட்டு லாபம் பார்ப்பார்கள். ஆனால் பத்து ரூபாய் நாணம் அச்சடிக்க தலா ஏழு ரூபாய் வரை ஆவதாக சொல்லப்படுகிறது. ஆகவே கள்ளப்பணம் அச்சடிப்பவர்கள், போலியான பத்து ரூபாய் நாணயங்களை அச்சடிக்க வாய்ப்பே இல்லை” என லாஜிக்கும் சொல்கிறது விபரம் அறிந்த வங்கி வட்டராங்கள்.
என்னதான் தீர்வு?
பத்து ரூபாய் நாணயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் வழக்கறிஞர் மதுசூதனன், “நாணயத்தின் எடைதான் பிரச்சினை. வங்கிகளில் எண்ணுவதற்கு சிரமம் என்பதோடு, சட்டைப் பையிலோ, பர்சிலோ இரண்டு மூன்று நாணயங்களுக்கு மேல் வைத்திருக்க இயலாது. எடை குறைவான நாணயங்களை அச்சடிக்க வேண்டும். அல்லது பிளாஸ்டிக் நோட்டுகளை கொண்டுவரப்போவதாக பல காலமாக சொல்லி வருகிறார்களே… அது நடைமுறைக்கு வரவேண்டும் என்றார்.
அதே போல ஒரே மதிப்புள்ள நாணயங்களை வெவ்வேறு வடிவங்களில் அடிக்கடி வெளியிடும்போது மக்களிடம் குழப்பம் ஏற்படுகிறது” என்றும் மதுசூதனன் தெரிவித்தார்.
உடனடி தீர்வு!
வங்கி அதிகாரிகள், “வங்கிகளில் பத்து ரூபாய் நாணங்களை, எண்ணுவதில் உள்ள பிரச்சினைதான் அடிப்படை காரணம் என்பது உண்மையே என்றாலும், 10 ரூபாய் நாணயங்களை எண்ணுவதற்கு தனி இயந்திரம் வைக்க வேண்டும்” என்கிறார்கள்.
ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
‘பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும்’ என ரிசர்வ் வங்கி பல முறை அறிவித்துவிட்டது. ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரியும், “10 ரூபாய் நாணயங்கள் வெவ்வேறு வடிவத்திலும் வெவ்வேறு அளவிலும் மத்திய அரசின் ஒப்புதலோடு அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கியால் புழக்கத்துக்கு விடப்படுகின்றன. இவை அதிகாரப்பூர்வமானதுதான். இவற்றை புழக்கத்துக்கு ஏற்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்திலேயே தெரிவித்தார்.
கடும் நடவடிக்கை
“இப்படி வதந்தி பரப்பினால், எப்.ஐ.ஆர். பதியப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்” எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும், ‘பத்து ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தால் ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறையின் 044 25399222 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் நடைமுறையில், ‘செல்லாது, செல்லாது’ என ஏழை எளிய மக்கள் விரட்டப்படுகிறார்கள். ‘செல்லும்’என அறிவிப்பதோடு இல்லாமல், மாற்று ஏற்பாடுகளை ரிசர்வ வங்கி மேற்கொள்ள வேண்டும். பிச்சைக்காரர்களே, 25 பைசாக்களை புறக்கணித்த பிறகே, அந்த நாணயங்கள் ‘செல்லாது’ என ரிசர்வ் வங்கி அறிவித்தது! அந்த ‘வேகத்தில்’ இல்லாமல் விரைவில் தீர்வு காண வேண்டும்.
எளிய மக்கள் பசியோடு அலையவும், பேருந்துகளில் இருந்து இறக்கிவிடப்படாமல் இருக்கவும் இது அவசியம்.