நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. தற்போது இரண்டாம் அமர்வு நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வழக்கம் போல் காரசாரமான விவாதங்களுக்கும் பஞ்சமில்லாமல் பார்லிமெண்ட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.,
சசி தரூர்
மக்களவையில்
சுப்ரியா சுலே
எம்.பி.யுடன் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தீவிரமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலேவும், அவருக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் சுவாரசியமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
சசி தரூருடன் உரையாட வசதியாக சுப்ரியா சுலே பின்பக்கமாக திரும்பிக் கொண்டு பேசினார். சசி தரூரும் தனது இருக்கைக்கு முன்னால் இருந்த மேஜை மீது சாய்ந்து கொண்டு சுப்ரியா சுலே பேசுவதை ரசித்துக் கொண்டும், அவருடன் பேசிக் கொண்டும் இருந்தார். இந்த ருசிகர சம்பவத்தின் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், சசி தரூர் – சுப்ரியா சுலே ஆகியோர் பேசும் வீடியோவை எடிட் செய்து, அதில் பின்னணி இசையாக புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலை இணைத்து வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.