பிரபல வங்க தேச நடிகரை விருந்து நிகழ்ச்சியில் வைத்து கொலை செய்த வழக்கில் தலைமறைவான தொழில் அதிபர் ஒருவர், 24 வருடங்களுக்கு பின்னர் நிழல் உலக தாதா போல இரு பெண் தோழிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பில்லா , போக்கிரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நிழல் உலகதாதாக்கள் எப்போதும் பெண் தோழிகளுடன் குடியும் கும்மாளமுமாக போலீசுக்கு தெரியாமல் சுற்றி திரிவதை போல காட்டி இருப்பார்கள்..!
அப்படி நிஜத்தில் சுற்றிவந்த ஒரு குட்டி தாதாவை அதே சினிமா பாணியில் துப்பாக்கி ஏந்திய ஏராளமான போலீசாருடன் சென்று, அவர் தங்கி இருந்த குடியிருப்பை சுற்றி வளைத்து வங்கதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்க தேசத்தில் 90 களில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சோஹல் சவுத்ரி. கடந்த 1998 ஆம் ஆண்டு டிசம்ப்பர் மாதம் 18 ந்தேதி டிரம்ஸ் கிளப்பில் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது சோஹல் சவுத்ரி மர்மகும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்
இந்த கொலை தொடர்பாக 9 பேர் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் தொழில் அதிபர் அஜீஸ் முகமது பாய், ஆஷீஷ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான இருவரில் தொழில் அதிபர் ஆஷிஷ்ராய் சவுத்ரி என்பவரும் ஒருவர்.
அப்போது வங்க தேசத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
கிட்டதட்ட அந்த சம்பவத்துக்கு பின்னர் ஒரு குட்டி நிழல் உலகதாதாவாகவே மாறிபோன அஷிஷ் ராய் சவுத்ரி , கொலை சம்பவம் நடந்து 24 ஆண்டுகள் கடந்த நிலையில் போலியான பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலை நகரான டாக்காவிற்குள் நுழைந்துள்ளார்.
அங்குள்ள பிங்க் சிட்டி ஷாப்பிங் மாலுக்கு அருகில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பில் பதுங்கி இருந்த அஷிஷ் ராய் சவுத்ரியை தேடி அவ்வப்போது சந்தேகத்துக்கிடமான நபர்கள் வந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து உளவாளிகள் மூலம் அங்கு தங்கி இருப்பது ஆசிஷ் ராய் சவுத்ரி என்பதை கண்டறிந்த டாக்கா போலீசார் ஏராளமான துப்பாக்கி ஏந்திய போலீசாருடன்அந்த குடியிருப்பை சுற்றிவளைத்தனர்.
அதிரடியாக வீட்டுக்குள் புகுந்த போலீசார் தொந்தியும் தொப்பையுமாக , இரு தோழிகளுடன் மது அருந்திக் கொண்டிருந்த ஆசிஷ் ராய் சவுத்ரியை அதிரடியாக கைது செய்தனர். அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி நாட்டு மதுப்பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
முதலில் போலீசாரிடம் தான் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்காக அப்போதே முன்ஜாமீன் பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த ஜாமீன் காலாவதியாகி பல வருடங்கள் ஆகி விட்டது என்பதை சுட்டிகாட்டி அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலையாளியாக தப்பிச்சென்ற ஆஷிஷ் ராய் சவுத்ரி 24 வருடங்களுக்கு பின்னர் பல்வேறு வழக்குகள் கொண்ட குட்டி தாதா போல நாடு திரும்பியதால், அவரை கைது செய்த போது அவர் வீட்டுக்குள் எப்படி இருந்தார் ? என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்பதற்காக அதனை வீடியோவாக பதிவு செய்த போலீசார் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளனர்.