பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு சிறு வியாபாரி ஒருவர் நடத்திய கருத்துக் கணிப்பு, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
கருத்துக் கணிப்பும், தேர்தலும் இரண்டற கலந்த எளிதில் பிரிக்க முடியாதது. பிரான்ஸ் நாட்டில் விரைவில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அந்த நாட்டில் சாக்ஸ் (காலுறை) விற்பனை செய்து வரும் சிறு வியாபாரி ஒருவர் கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளார். அது சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளதற்கு காரணம், அவர் கருத்துக் கணிப்பை முன்னெடுத்து நடத்திய விதம்.
அவர் தான் விற்பனை செய்யும் சாக்ஸ்களில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமான 8 பேரின் உருவங்களை அச்சடித்து விற்பனை செய்துள்ளார். அதற்கு உள்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ஆன்லைனிலும் சாக்ஸ் விற்பனையை அந்த வியாபாரி தொடங்கியுள்ளார். உள்நாட்டில் இப்போதைக்கு அதிபர் வேட்பாளர் எரிக் ஜெம்மோருக்கு அமோக ஆதரவு உள்ளதாம். அவர் முதலிடத்தில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு 29 சதவீத ஆதரவு உள்ளது என தங்களிடம் விற்பனையான சாக்ஸ்களின் எண்ணிக்கையை கொண்டு தெரிவித்துள்ளார் அந்த வியாபாரி.
வெளிநாடுகளை பொறுத்தவரையில் ஜெர்மனியில் தற்போதைய பிரதமர் மக்ரோனுக்கும், கனடாவில் ஜெம்மோருக்கும், கிரீஸ் நாட்டில் மெலன்கானுக்கும் ஆதரவு இருப்பதாக தனக்கு வரும் சாக்ஸ் ஆர்டரை வைத்து அந்த வியாபாரி கணித்துச் சொல்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் வெறும் சாக்ஸ் வியாபாரிகள்தான். எங்களுக்கு அரசியல் தெரியாது. ஆனால், இதுபோன்ற தேர்தல் சமயங்களில் இப்படி புதுமையான விற்பனையை தொடங்கியது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த சாக்ஸ் விற்பனை முடிவும், தேர்தல் முடிவும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், இதனால் கிடைக்கும் மகிழ்ச்சிதான் முக்கியம்” என அவர் தெரிவித்துள்ளார்.