கடலூரில் பீஸ்ட் படத்திற்கு ரசிகர் காட்சி தர மறுத்த திரையரங்கை கண்டித்து சாலைமறியல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
விஜய் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கடலூர் நகர் பகுதியில் அமைந்துள்ள 4 திரையரங்குகளிலும் விஜயின் பீஸ்ட் திரைப்படம் திரையிடுவதற்காண ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நான்கு திரையரங்கிலும் முதல் நாள் ரசிகர் காட்சிகள் வெளியிட வேண்டும் என்றும், அது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒளிபரப்ப வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு ரசிகர் காட்சிக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கடலூர்- புதுவை சாலையில் திரையரங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பாரதி சாலை மற்றும் அண்ணா சாலையில் முழுவதுமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் விஜய் ரசிகர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களையும் கலைத்தனர்
ரசிகர்காட்சி தந்தே தீர வேண்டும் என்று அடம் பிடித்த அ.இ.த.வி.ம.இ அமைப்பின் நிர்வாகிகளை சட்டையை பிடித்து இழுத்துச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளான சீனு மற்றும் ராஜசேகர் மற்றும் ராஜ்குமார் ஆகியோரைகாவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரையரங்குகளில் மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கிக் கொள்ளும் அ.இ.த.வி.ம.இ அமைப்பின் நிர்வாகிகள், ரசிகர் காட்சி என்று கூறி ரசிகர்களிடம் கூடுதல் விலை வைத்து டிக்கெட் விற்பனை செய்வதை தவிர்க்கவும், திரையரங்கில் உற்சாகம் என்ற பெயரில் ரசிகர்களின் அத்துமீரல்களை சமாளிக்கவும் ரசிகர் காட்சி ரத்து செய்யப்படுள்ளதாக திரையரங்கு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.