புதுச்சேரி : ஜி.எஸ்.டி., இழப்பை ஈடு செய்ய, மத்திய அரசின் உதவியை ரூ.3,400 கோடியாக உயர்த்த வேண்டும் என நிதி அமைச்சரிடம், கவர்னர் வலியுறுத்தி உள்ளார்.
டில்லி சென்றுள்ள கவர்னர் தமிழிசை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு 2022- 23ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில், ‘மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு நிதி உதவி’ திட்டத்தை அறிவித்துள்ளது,
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்ட வரம்பிற்குள் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்தினார்.மேலும், புதுச்சேரியின் குறைந்த வளம் மற்றும் நிதி ஆதாரங்களை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கான மத்திய உதவியை நீட்டிக்க வேண்டும்.
இல்லையெனில், பிற யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குவது போல், மத்திய மானியங்களை 100 சதவீதம் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் உதவி நீட்டிக்கப்படாவிட்டால், ஜி.எஸ்.டி., இழப்பை ஈடு செய்யும் வகையில், 2022- – 23 நிதியாண்டில் மத்திய அரசு உதவியை ரூ. 3,400 கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான நிதி உதவியை நிதி அமைச்சகம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார்.
Advertisement