கேரளாவில் உள்ள கோழிகோட்டில் பிறந்த இவர், தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சியிலிருந்து தொடங்கியவர். மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணி செய்த பார்வதி 2006-ல் `Out of syllabus’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர் 2008-ல் அசரவைக்கும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ‘பூ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின் மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.
பிரத்திவ் ராஜுடன் இவர் நடித்த ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தின் காஞ்சனமாலா கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையை நம் முன் கொண்டு வந்த கதாபாத்திரமாகும். இப்படம் அவரின் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்த படம்.
இதே போல் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘Uyare’, ‘Virus’, மற்றும் ‘Take off’ போன்ற படங்கள் இவரை மலையாளம் சினிமாவைத் தாண்டி இந்திய அளவில் கொண்டு சென்றது.
கதாநாயகி என்றாலே பெரும்பாலும் அழகியல் சார்ந்த கதாபாத்திரங்களும் கதைகளும் தான் அதிகம். இந்த பிம்பங்களைத் தாண்டி ஒரு நடிகை வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அப்படி ஒரு கதாபாத்திரம் கொண்ட படம்தான் ‘Uyare’.
தனித்துவமான படங்கள் மட்டுமில்லாமல் ‘Charlie’, ‘Bangalore days’ போன்ற கமர்சியல் படங்களிலும் நடித்து தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழி ரசிகர்களுடைய கவனத்தையும் ஈர்த்தார்.
நடிகையாக மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்தும், பெண்களுக்கான பிரச்னைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
படங்களில்கூட இவர் தேர்தெடுத்து நடிக்கும் படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் பிற்போக்கான கதாபாத்திரங்களாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
பார்வதி மற்றும் இரண்டு கதாநாயகிகள் சேர்ந்து நடித்து கடந்த வருடம் OTT-ல் தமிழில் வெளியான ‘சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படம் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படம் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது.
தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பால் மலையாள திரையுலகை கலக்கி வந்த பார்வதி தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார். அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!