பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஜெய்மதி நகரை சேர்ந்த சந்துரு (22) நேற்று முன்தினம் இரவு நண்பர் சைமன் ராஜுடன் பழைய குட்டதஹள்ளியில் உள்ள உணவகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது எதிரில் வந்த ஷாகித் அகமதுவின் இரு சக்கர வாகனத்தின் மீது சைமன் ராஜுவின் வாகனம் மோதியது. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட சண்டையின் போது ஷாகித் அகமது, சந்துருவை தாக்கிகத்தியில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த சந்துரு நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே தலித் சங்கர்ஷ சமிதி அமைப்பினர், ‘‘தலித் வகுப்பை சேர்ந்த சந்துருவை சாதி மற்றும் மொழி ரீதியான கோபத்தின் காரணமாக கொலை செய்திருக்கிறார்கள்”என குற்றம் சாட்டினர்.
கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, ‘‘சந்துரு கன்னடத்தில் பேசியதால் முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். அவரை உருது மொழியில் பேச சொல்லி தாக்கியதாக தகவல் கிடைத் துள்ளது. இதில் போலீஸார் ஷாகித் அகமது உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்”என்றார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ள முஸ்லிம் அமைப்பினர், குற்றவாளிகளை மொழி ரீதியாக அடையாளப் படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.