புதுச்சேரி: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்து புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 திமுக எம்எல்ஏ-க்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டாம், புதுச்சேரி அண்ணாசாலையில் இருந்து தொடங்கியது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் அவைத் தலைவர் சிவக்குமார், எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாட்டுவண்டியை எதிர்க் கட்சித்தலைவர் சிவா ஓட்டி வந்தார். அவரோடு எம்எல்ஏக்கள், திமுகவினர் 5-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சட்டப்பேரவையை முற்றுகையிட வந்தனர். அண்ணாசாலையில் தொடங்கிய ஊர்வலம், நேரு வீதி, மிஷன் வீதி, ஜென்மராக்கினி கோவில் வழியாக சட்டமன்றம் நோக்கி வந்தது. ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் ஏராளமானோர் வந்தனர்.
ஊர்வலத்தை ஆம்பூர் சாலை சந்திப்பில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் விலை உயர்வை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், “மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் முதல்வர் ரங்கசாமி தலையாட்டி வருகிறார். அவர் எதற்கும் வாய் திறப்பதில்லை. தேர்தலின்போது பல வாக்குறுதிகளை தந்தார். குறிப்பாக மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, புதிய தொழில் கொள்கை ஆகியவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை” என்று சிவா கூறினார்.
இதையடுத்து திமுகவினர் போலீஸாரின் தடுப்புகளை மீறி முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் சிவா உட்பட 4 எம்எல்ஏக்கள் மற்றும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.