தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெண்களின் பாதுகாப்புக்காக அதிமுக சார்பில் பெண்களுக்கு சேஃப்டி கிட்ஸ் என்கிற தற்காப்பு உபகரணங்களை வழங்கினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் நிலவி வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். பெண்கள்க்கு எதிரான பாலியல் குற்றங்களில் திமுகவினரே அளவில் ஈடுபடுவதாக அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காக அதிமுக சார்பில், பெண்களுக்கு சேஃப்டி கிட்ஸ் எனப்படும் தற்காப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு பெப்பர்ஸ் ஸ்பிரே உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களை பெண்களுக்கு வழங்கினார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் எப்போதும் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பெண்களுக்கு சேஃப்டி கிஸ்ட்களை வழங்கிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “திமுகவின் 10 மாத கால ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. சிறுமிகளுக்கு பாதுகாப்பு கிடையாது. தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆட்படுகிறார்கள். நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நாளுக்கு நாள் பெண்களுக்கு கூட்டு பாலியல் பலாத்காரமும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதற்காக இன்று அவர்களுக்கு பெப்பர்ஸ் ஸ்பிரே வழங்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி ஆபத்து ஏற்படுகின்ற காலத்தில் தங்களை காத்துக்கொள்ளுங்கள். மகளிரைப் பற்றி கவலைப்படாத ஒரு அரசு என்று சொன்னால் அது திமுக அரசுதான்.
அதனால், பெண்களை பாதுகாக்கும் விதமாக அதிமுகவின் சார்பாக இந்த பெப்பர் ஸ்பிரே வழங்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“