ஜெயலலிதா மறைந்ததும் அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்., தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தர்மயுத்தம் தொடங்கினார். எனினும் எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். கட்சி உடைந்ததால் இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அச்சமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். எனினும் தேர்தல் ரத்து செய்யபபட்டது.
அப்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கில் கைதான தினகரன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தினகரனுக்கு இடைத்தரகராக செயல்பட்டதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரையும் அமலாக்கத்துறை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள சுகேஷின் வீட்டில் ரெயிடும் நடத்தப்பட்டு, ரொக்கப் பணமும் சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக எவ்வித சலசலப்பும் இன்றி தூங்கிக் கொண்டிருந்த அவ்வழக்கு தற்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி அரசியல் பார்வையாளர்களிடம் விசாரித்தபோது, “ஒருமுறை சொல்லிப் பார்ப்பார்கள், கேட்கவில்லை என்றால் ஏதாவது ஒரு வழியில் குடைச்சல் கொடுக்கத் தொடங்குவார்கள், இதுதான் பா.ஜ.க! 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதில் இருந்தே பா.ஜ.க தயாராகி வருகிறது. தமிழகத்தில் தனித்துக் களம் காண முடியாது என்பது தெரியும். குறைந்தபட்சம் சேரும் கூட்டணியாவது பலமாக இருக்க வேண்டும், அதாவது சவாரி செய்யும் குதிரை ஆரோக்யத்தோடு இருக்க வேண்டும் என்பதால், அ.தி.மு.க-வை பலமாக்க, அ.ம.மு.க-வை அதனுடன் இணைக்க வேண்டும் என்று கருதுகிறது பா.ஜ.க.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகக் கூட இரு கட்சிகளையும் இணைக்க டெல்லி விரும்பியது, ஆனால் எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை. 2024 எம்.பி தேர்தலுக்கு இரண்டரை ஆண்டுகளே இருப்பதால் அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வுடன் கரைத்துவிடுங்கள் என்று டி.டி.வி-க்கு சொல்லப்பட்டதாம். அதனை மறுத்த தினகரன், ஏப்ரல் 18-ம் தேதி முதல் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கப்போகிறார்.
இதனால் அப்செட்டான டெல்லி தலைமை தூங்கிக் கொண்டிருந்த இரட்டை இலை வழக்கினை மீண்டும் கையில் எடுத்துள்ளதாம். அதனடிப்படையில்தான் தினகரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, சுகேஷ் லஞ்சம் கொடுக்க முயன்றதை தான் பார்த்ததாக சாட்சியம் அளித்த வழக்கறிஞர் கோபிநாத் மார்ச் 6-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். 32 வயதேயான கோபிநாத் யாருடைய பிரஷரில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற மர்மம் எப்போது விலகுமோ?!” என்று முடித்தனர்.