வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெனிவா : ”மண் அழிவை தடுத்து, மண் வளத்தை மீட்டெடுக்க உலகெங்கும் உள்ள மக்கள் இப்போதே குரல் கொடுக்க வேண்டும்,” என, ஐ.நா., தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் பேசினார்
.’மண் காப்போம்’ என்ற இயக்கத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு துவங்கி, உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 100 நாள் பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மண் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவாக, ஐ.நா.,வுக்கான இந்திய நிரந்தர திட்ட அமைப்பு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி, ஜெனிவா ஐ.நா., தலைமையகத்தில் நடந்தது.

இதில், சத்குரு பேசியதாவது: உலகின் பல நாடுகளில் மண் தன் வளத்தை வேகமாக இழந்து, அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்னை தீர்வு காணப்படாமல் சென்றால், உலக அளவில் மிகப்பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐ.நா., எச்சரித்துள்ளது. ‘மண் முற்றிலுமாக வளமிழந்து தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும்.உள்நாட்டுக் கலவரங்கள் உருவாகும். மக்கள் பெருமளவில் இடம்பெயர வேண்டிய அவல நிலையும் உருவாகும்’ என, கூறியுள்ளது.

எனவே, மண் வளத்தை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்கள், இப்போதே இயற்றப்பட வேண்டும். மண் அழிவை தடுப்பதற்கும், அதன் வளத்தை மீட்டு எடுப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு மக்கள் குரல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் சத்தமாக குரல் எழுப்பாவிட்டால், பிரச்னைக்கு தீர்வு காண எந்த அரசும் ஆர்வம் காட்டாது.இவ்வாறு சத்குரு பேசினார்.
Advertisement