சென்னை: மத்திய அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் நிதியுதவியுடன் சென்னை ஐஐடி-யில் ரூ.4,500 கோடி மதிப்புள்ள ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக ஐஐடியின் இயக்குநர் வீ.காமகோடி தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் நடந்து வரும் தொழில் கூட்டு முயற்சிகள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
சென்னை ஐஐடியில், தொழில்நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. வணிக நோக்கில் மட்டுமல்லாமல் சமூக மேம்பாட்டுக்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கிலும் சிஎஸ்ஆர் எனப்படும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழும் ஆய்வுகள் நடக்கின்றன.
ஐஐடி வளாகத்தில் ஏறத்தாழ 1,200 ஆரா்ய்ச்சி திட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் 60முதல் 75 சதவீதம் தொழில்நிறுவனங்கள் தொடர்புடையவை. தற்போது மிக வேகமாக நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணிகளில்ஒன்று 5-ஜி-ஐ என்பதாகும். இந்தியா 5-ஜி-ஐ தரத்தில் கவனம் செலுத்துகிறது. மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஐஐடி சென்னை, கான்பூர், மும்பை, டெல்லி மற்றும் சமீர் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து ‘சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் இன் வயர்லெஸ் டெக்னாலஜி’ (CEWiT) என்ற மையத்தை நிறுவி, உலகத் தரத்தில் 5-ஜி-ஐ குறித்த ஆராய்ச்சிப் பணிகளைச் செய்து வருகின்றன.
சைபர் ஃபிசிக்கல் சிஸ்டம் குறித்த ஆராய்ச்சி பணிகளுக்கும், ஸ்டார்ட்-அப் எனப்படும் புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதற்கும் மத்திய அரசு ‘நேஷனல் மிசன் ஆன் இண்டர்டிஸ்சிபிலினரி சைபர்ஃபிசிக்கல் சிஸ்டம்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் சென்னை ஐஐடி உட்பட அனைத்து ஐஐடி-க்களிலும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஐஐடி மாணவர்களின் புதிய சிந்தனையை புதிய தொழிலாக, புதிய தயாரிப்பாக மாற்ற முடியுமா?என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக நிர்மான் என்ற மையம் தனியாக செயல்படுகிறது. இதன் மூலமாக இதுவரை 350 ஸ்டார்ட்-அப்நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள் ளன. ஆண்டுக்கு 120 என்ற அளவில்உருவாகி வரும் இந்த ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களை ஆண்டுக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
ஐஐடியில் இயங்கி வரும் மூளைஆராய்ச்சி மையத்தில் மனித மூளை குறித்த ஆராய்ச்சி பணிகள்நடந்து வருகின்றன. மனித மூளையின் மாடலை அப்படியே கணினியில் உருவாக்கி (டிஜிட்டல் ட்வின்) இந்த ஆராய்ச்சி நடக்கிறது. 4-வது தொழில்நுட்ப புரட்சி எனப்படும் இண்டஸ்ட்ரியல் 4.0 குறித்த ஆராய்ச்சியும், மின்வாகனம், லித்தியம் பேட்டரி குறித்த ஆராய்ச்சிகள், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி எரிபொருள் என அனைத்து வகை எரிபொருளிலும் இயங்கக்கூடிய மல்டி ஃபியூல் இன்ஜின் என பலதரப்பட்ட ஆய்வுப் பணிகளும் நடந்து வருகின்றன.
இதில், வெற்றிடத்தில் வாகனங்கள் செல்லக்கூடிய வகையிலான ஹைப்பர்லூப் தொழில்நுட்ப ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த தொழில்நுட்பம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு லூப் ரயிலில் வெறும் 35 நிமிடத்தில் சென்றுவிட முடியும். இதற்காகபிரத்யேக பைப் போடப்பட்டு அவற்றின் வழியாக லூப் ரயில் களை இயக்க முடியும்.
ஆராய்ச்சி பணிகள் என்று பார்த்தால் ஐஐடியில் ஓராண்டுக்கு ரூ.700 கோடி மதிப்பிலான ஆய்வுகள் நடக்கும். அவை ஒவ்வொன்றும் 3 அல்லது 4 ஆண்டு காலம் செல்லக்கூடியது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் ரூ.4,500 கோடி மதிப்புள்ள ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு ஐஐடி இயக்குநர் காமகோடி கூறினார்.