புதுடெல்லி: முல்லை பெரியாறில் புதிய அணை அமைப்பது குறித்து யாரும் இப்போது பேச வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது. இவ்வழக்குகள் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை. முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அதிகாரிகள் இடையூறு செய்கின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து கேரள அரசு தரப்பில் முட்டுக்கட்டை போடுகிறது. கேரளா தடையாக இருந்தால், முல்லைப்பெரியாறு அணையை எப்படி பராமரிக்க முடியும். மழைக்காலத்தின் போதெல்லாம் அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி கேரளா பிரச்சனை செய்கிறது. மேற்பார்வை குழு அனுமதி தந்தாலும் வேலை செய்ய விடாமல் கேரள அரசு தடுக்கிறது. முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவுக்கு அனைத்து அதிகாரங்களையும் தரக்கூடாது. புதிய அணை கட்ட வேண்டுமா?. வேண்டாமா ? என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தையும் மேற்பார்வை குழுவுக்கு தரக்கூடாது,’ என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம்.புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம்.இயற்கை பேரழிவுகளை யாராலும் தடுக்க முடியாது, ‘ என கூறியுள்ளது