`மாணவர்கள் தங்களது பிரச்சனைகளை வெளியே சொல்லக்கூடாது’ என்ற சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பபெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் துணை வேந்தரிடம் வலியுறுத்தியது. அதைத்தொடர்ந்து `பல்கலைக்கழக விதிகளை பின்பற்றியே மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினோம்’ என பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் கடந்த சில நாள்களாக நிர்வாக சிக்கல்கள் காரணமாக கடும் சர்ச்சைகுள்ளாகி வருகிறது. இந்த நிர்வாக சிக்கல்கல் காரணமாக, `பல்கலைக்கழக நிர்வாகமே பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது’ என மாணவர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது.
முன்னதாக `பல்கலைக்கழக நிர்வாகம், வேண்டுமென்றே உதவி பேராசிரியர் மீது பொய்யான அதேவேளையில் மாணவிகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றது’ எனக் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்கலைக்கழக மாணவ மாணவிகள் நேற்று மனு அளித்திருந்தனர். இதுகுறித்து முறையாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கூறியிருந்தனர். மாணவர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து, வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே பொறுப்பு பதிவாளர் தங்கவேல், “மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஊடகம், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்க கூடாது” என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் துறை தலைவர்கள் மாணவர்கள் அனைவரிடமும், பேட்டி கொடுக்கமாட்டோம் என்று கையொப்பம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. மாணவர் அமைப்புகள் சார்பில், `நிர்வாகத்தால் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாதிப்புகளை, அவர்கள் எப்படி வெளிபடுத்த முடியும் என்றும் இது பல்கலைக்கழகத்தின் உச்சகட்ட சர்வதிகார போக்கு’ என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் இன்று துணைவேந்தரை சந்தித்து, அந்த சுற்றறிக்கையை திரும்பபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த துணை வேந்தர், பல்கலைக்கழக விதிகள்படியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அதனால் அதுகுறித்து எதுவும் பேசமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “பல்கலைக்கழகத்தின் விதிகள் யாவும், `மாணவர்கள் சமூதாயத்தில் பல்கலைக்கழகத்திற்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்’ என்பதற்காக கொண்டுவரப்பட்ட விதிகள். ஆனால் அந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் குரல் வலையை நெரிக்கும் வகையில் செயல்படுத்துகிறது. மாணவர்களே நேரடியாக பாதிக்கும்போது, அதை எப்படி கூறாமல் இருக்க முடியும்?” என்றும் கேள்விகள் எழுப்பினர். மேலும், இது தொடர்பாக பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்தி: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ? டாஸ் வென்று பவுலிங்க் தேர்வுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM