ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் பழங்குடி மக்களின் கிராமங்களின் தேவைகள் ஒவ்வொன்றாக சமீப காலங்களில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு டாப்ஸ்லிப் அருகே இருக்கும் எருமைப்பாறை என்ற பழங்குடி கிராமத்திற்கு தேவையான மின்சார வசதியை ஏற்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர் ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறையினர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் 36 குடும்பங்களைக் கொண்ட இந்த காடர் பழங்குடி கிராமத்திற்கு மின்சார வசதியை சில மாதங்களுக்குள் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதன்கிழமை அன்று தமிழக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் உலந்தி வனச்சரகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த கிராமத்தை பார்வையிட்டு சென்றனர். பழங்குடி மக்கள் மற்றும் விலங்குகளுக்கு எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாத வகையில் கேபிள்கள் மூலம் மின்சாரம் இங்கே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் வரும் 18 பழங்குடி கிராமங்களுக்கு மின்சார தேவைக்காக சோலார் விளக்குகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிக அளவு மழைப் பொழிவை பெரும் பகுதிகளில் ஒன்றாக இருக்கும் ஆனைமலையில், பருவ காலத்தின் போது சோலார் விளக்குகள் மக்களுக்கு பெரிய அளவில் உதவிகரமாக இல்லை என்று பழங்குடிகள் தங்களின் அதிருப்தியை தொடர்ந்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வன உரிமைச் சட்டத்தின் கீழ் குடியிருப்பு பட்டாக்களைப் பெற்றுள்ள கிராமங்களுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநருமான எஸ். ராமசுப்ரமணியனிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய போது, சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்களின் படியே இம்மக்களுக்கு மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். சாலையோரம் அமைந்திருக்கும் கிராமம் என்பதாலும், அவர்களின் கிராமத்தை தொட்டே பரம்பிக்குளம் வரை உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதாலும் இவர்களுக்கு மின்சாரம் வழங்குவது எளிமையானதாக இருக்கும் என்று நம்புகின்றோம் என்று கூறினார்.
“வனவிலங்குகளுக்கு எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வகையில் உயர்மின் அழுத்தம் வீட்டுத் தேவைக்கான மின்சாரமாக மாற்றப்பட்டு, பூமிக்கடியிலோ அல்லது ஏ.பி.சி. கேபில்கள் மூலமாக மின்சாரம் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், சாதாரண மின்சார கேபிள்களைக் காட்டிலும் இதன் விலை கூடுதாலாக உள்ளது. இருந்தாலும் பொதுமக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த கேபிள் முறைகளை முடிவு செய்துள்ளோம். அனைத்தும் உறுதி செய்யப்பட்டு மின்சார விநியோகம் செயல்பாட்டிற்கு வர மூன்று மாதங்களாவது ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“1985ல் இருந்தே எங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றோம். சர்க்கார்பதியில் இருந்து எங்கள் கிராமம் வழியாக பரம்பிக்குளத்திற்கு மின்சாரம் செல்கிறது. ஆனால் எங்களின் கிராமத்திற்கு மட்டும் மின்சாரம் இல்லை. பல வருடங்களாக நாங்கள் வெறும் மண்ணெய் விளக்கில் தான் இருளை சமாளித்து வந்தோம். ஒரு சில குழந்தைகள் வெளியே விடுதிகளில் தங்கி படித்து கல்வி கற்றனர். ஆனால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது இந்த மின்சார வசதி இல்லாத காரணத்தால் எட்டாக்கனியாகவே அமைந்தது. இப்போது மின்சாரம் தருகிறோம் அப்போது தருகிறோம் என்று அவ்வபோது பேச்சு வரும். ஆனால் எங்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. தற்போது வனத்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவது உண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார் எருமைப்பாறை கிராமத்தின் முன்னாள் கவுன்சிலரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பழங்குடி நலச்சங்க உறுப்பினருமான பத்மினி.