புதுடெல்லி: மும்பையில் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வகை கொரோனா இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் உலகளவில் ஒமிக்ரான் வைரசும், அதன் உருமாற்றங்களான பிஏ-1, பிஏ-2 வைரஸ்கள் மட்டுமே தாக்கி வருகின்றன. இவற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் சில நாட்களுக்கு முன் ‘எக்ஸ்இ’ என்ற புதிய உருமாற்ற கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பிஏ2 ஒமிக்ரானை விட 10 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்ட இது பிஏ-1 மற்றும் பிஏ-2 வைரஸ்களில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் ஊடுருவி விட்டது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி மும்பையில் கண்டறியப்பட்டுள்ளார் என மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் உறுபடுத்தியிருந்தார். இந்நிலையில், மும்பையில் உருமாறிய எக்ஸ்இ வகை கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணுக்கு மரபணு பரிசோதனை செய்ததில், அவருக்கு ஒமிக்ரானில் இருந்து உருமாறிய எக்ஸ்இ வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்திருந்தது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாக பிஐபி மகாராஷ்டிரம் வெளியிட்ட செய்தியில், ‘பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவரின் மருத்துவ கோப்புகள் அனைத்தையும் மரபணு நிபுணர்கள் சோதனை செய்தனர். தற்போதைய சான்றுகளின்படி, எக்ஸ்இ வகை ெகாரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 50 வயதுடைய பெண், கடந்த பிப்ரவரி 10ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளுக்கு அவர் பயணம் செய்யவில்லை” என தெரிவித்துள்ளனர். ஒமிக்ரான் வகையான பிஏ-2 தீநுண்மியைவிட எக்ஸ்இ வகை தீநுண்மி 10 சதவீதம் வேகமாக பரவ கூடியதாக தென்படுகிறது. இந்த புதிய வகை தீநுண்மி முந்தைய கொரோனா வகைகளைவிட வேகமாக பரவ கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.