கர்நாடகத்தில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட இந்துத்துவ மாணவர்களுக்கு எதிராக தனி மனுஷியாக போராடிய மாணவி முஸ்கானுக்கு
அல் கொய்தா
தலைவர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த நிலையில், அது தேவையில்லை என்று கூறி நிராகரித்துள்ளார் முஸ்கானின் தந்தை முகம்மது ஹுசேன் கான்.
சமீபத்தில் கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளில் ஹிஜாப் அணியக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு எதிராக இந்துத்துவா மாணவர்களும் காவித் துண்டுடன் போராட ஆரம்பித்தனர். தலித் மாணவர்கள் நீலத் துண்டுடன் போராட்டத்தில் இறங்கினர். இதனால் கல்விக் கூடங்கள் போர்க்களமாகின.
இந்த நிலையில் மாண்டியாவில் உள்ள பியூசி கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்தபடி வந்த மாணவி
முஸ்கான்
என்பவரை இந்துத்துவா மாணவர்கள் காவித் துண்டு, கொடியுடன் சுற்றிச் சூழவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் முஸ்கான் தனி மனுஷியா அவர்களை எதிர்த்துப் போராடினார். அவர் முழங்கிய அல்லா ஹு அக்பர் கோஷம் அதிர வைத்தது. இந்த சம்பவம் நாடு முழுக்க வைரலானது.
இந்த நிலையில் கல்வி நிறுவனங்களுக்குள் மத அடையாளங்களுடன் வரக் கூடாது என்ற மாநில அரசின் தடை சரியே என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த முஸ்லீம் மாணவிகள் பலரும் ஆண்டு இறுதித் தேர்வை எழுதாமல் புறக்கணித்ததையும் காண முடிந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான்
அல் ஜவாஹிரி
தலையிட்டுள்ளார். மாணவி முஸ்கானைப் பாராட்டிய அவர், இந்தியாவில் மத சுதந்திரம் அடக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இவரது இந்த தேவையில்லாத தலையீட்டுக்கு முஸ்லீம் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக மாணவி முஸ்கானின் தந்தை முகம்மது ஹுசேன் கான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோ குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்த நபர் யாரென்றே தெரியாது. இன்றுதான் முதல் முறையாக அவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். அவர் அரபியில் ஏதோ சொல்லியிருக்கிறார். நாங்கள் எங்களது நாட்டில் அமைதியாக, சந்தோஷமாக வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் சகோதரர்களாக மதித்து வாழ்கிறோம்.
தீவிரவாத அமைப்பின் தலைவர் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை. இதுபோன்ற கருத்துக்கள் எங்களது குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து விடும். இந்த விவகாரத்தில் சிலர் எங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நானும் அதையேதான் கோருகிறேன். விசாரணை நடத்தட்டும். உண்மையை அறிய போலீஸாரும், அரசும் தாராளமாக விசாரணை நடத்தலாம். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். நீதி இருக்கிறது, கோர்ட் இருக்கிறது, அரசு இருக்கிறது. விசாரணையில் உண்மை வெளிவரட்டும்.
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். இது தேவையில்லாத பிரச்சினையைத்தான் உருவாக்கும். அந்த நபர் எங்களுக்கு எந்த வகையிலும் தொடர்புடையவர் அல்ல. இது எங்களுக்குள் பிரிவினையை உருவாக்கும் பேச்சாகும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக அல் ஜவாஹிரி வெளியிட்டிருந்த வீடியோவில், முஸ்கானை வெகுவாகப் பாராட்டிப் பேசியிருந்தார். அவர் கூறுகையில், இந்து இந்தியாவை அம்பலப்படுத்திய முஸ்கானை கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும் கூறியிருந்தார்.