கீவ்:நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதிக ஆயுதங்கள் அளிக்கும்படி, ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பிடம் உக்ரைன் கோரியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், ஆறு வாரங்களை கடந்துள்ளது. தலைநகர் கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, அங்கிருந்த தன் படைகளை ரஷ்யா வாபஸ் பெற்றுள்ளது.இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருந்து தாக்குதல் நடத்த, ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டான்பாஸ் என்று அழைக்கப்படும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. அதனால், இந்தப் பிராந்தியம் வழியாக உக்ரைனுக்குள் நுழைய ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, நேட்டோ நாடுகளின் உதவியை உக்ரைன் கோரியுள்ளது.
பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடந்த நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமித்ரோ குலேபா பங்கேற்றார். அதில், ரஷ்யாவை எதிர்கொள்ள ஆயுதங்கள் வழங்கும்படி, நேட்டோ நாடுகளை அவர் வலியுறுத்தினார். ஆனால், உக்ரைனைத் தொடர்ந்து தங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்பதால், போர் விமானங்கள், பீரங்கிகள் போன்றவற்றை அளிக்க நோட்டோ நாடுகள் மறுத்து வருகின்றன.
உக்ரைனின் தெற்கே உள்ள கடலோர நகரமான மரியுபோலில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதுவரை, 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த நகரின் மேயர் போய்சென்கோ கூறியுள்ளார். நகரில் உள்ள கட்டடங்களில், 90 சதவீதம் சேதமடைந்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சிஉக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பல்கலைகளில், இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர். போர் துவங்கியதும், அங்கிருந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர். இந்தப் பல்கலைகள், கடந்த மாதத்தில் இருந்து மருத்துவ மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக, பாடங்களை நடத்தி வருகின்றன.
சில நாடுகளில் உள்ள மருத்துவமனைகள், இந்த மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிகளை அளிக்க முன்வந்துள்ளன. இதற்கிடையே, மாணவர்களுக்கு தேவையான நேரடி பயிற்சிகளை அளிக்கும்படி, பல நாட்டு அரசுகளை, உக்ரைன் பல்கலைகள் வலியுறுத்தியுள்ளன.
Advertisement