ரஷ்ய அதிபர் புதினின் மகள்களைக் குறிவைத்து தடைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து போரிட்டு வரும் நிலையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொருளாதாரத் தடைகள், எண்ணெய் இறக்குமதி உறவு துண்டிப்பு, ரஷ்ய விமானங்கள் பறக்க வான்பரப்பு மூடல் எனப் பல்வேறு நடவடிக்கைகளை முன்னதாக அமெரிக்கா மேற்கொண்டிருந்தது.
உலகின் மேலும் பிற நாடுகளும் ரஷ்யாவுக்கு சில தடைகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிபர் புதினின் மகள்களில் கத்ரீனா மற்றும் மரியா ஆகிய இரண்டு பேரைக் குறிவைத்து தனது நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்க தொடங்கியுள்ளது.
இவர்களில் கத்ரீனா, ரஷ்ய அரசின் பாதுகாப்பு தொழிற்சாலையில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார். மரியா, மரபணு சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரின் ஆராய்ச்சி பணிகளுக்கு அரசு பில்லியன் கணக்கில் பணத்தைக் கொடுத்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், மரியா மற்றும் கத்ரீனாவுக்கு அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் சொத்துகள், முதலீடுகள் உள்ளன. அவற்றை முடக்க போவதாக அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது. புதினின் சொத்துகள் பலவும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலேயே ஆங்காங்கே பதுக்கப்பட்டு உள்ள காரணத்தால் அவற்றை முடக்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.