சென்னை: மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாக ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாஷா முத்துராமலிங்கம், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகய்யா, பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளத்து மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
ராமேசுவரத்தில் 780 மீன்பிடி படகுகளும், 1,118 நாட்டுப் படகுகளும் உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, ராமேசுவரம் பகுதியில் உள்ள படகு நிறுத்துமிடத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், ராமேசுவரத்தில் மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், அனைத்து வசதிகளும் கொண்ட மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று தேர்தல் வக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஆய்வுப் பணிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு,நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்ககள் மேற்கொள்ளப்படும். இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டிலும் மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு, ரூ.1.05 கோடியில்ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல, ஏரியின் முகத்துவாரத்துக்கு படகுகள் வந்து செல்லஏதுவாக, அதை தூர்வாரி, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், கருங்கல் சுவர் அமைத்து ஆழப்படுத்தவும் ரூ. 26.85 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். வனத் துறை அனுமதி கிடைத்ததும் இந்தப் பணிகள் தொடங்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.