ரூ.10 லட்சத்திற்காக பள்ளி மாணவி கடத்தல்- 3 மணி நேரம் அலைகழித்து பின் சிக்கிய கடத்திய பெண்

 ரூ. 10 லட்சத்திற்காக 10 ஆம் வகுப்பு  மாணவியைக் கடத்திய பெண்ணை சாதுர்யமாக கைது செய்து 3 மணி நேரத்தில் மாணவியயை பத்திரமாக மீட்டுள்ளனர் காவல்துறையினர்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் 15 வயது மகள் ஆயிரம் விளக்கு பைக்ராஸ் கார்டன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மதியம் பள்ளியில் இருந்து வெளியே வந்த மாணவியை, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தடுத்து நிறுத்தி ’உன் அம்மாவின் தோழி’ என்றுக்கூறி ஆட்டோவில் ஏற்றி சென்றார். ஆனால், ஆட்டோ கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு செல்லவில்லை. இதனிடையே மாணவியை அழைத்து வரவேண்டிய வேன் ஓட்டுனர் கணேசன் என்பவர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து ’பள்ளி விட்டும் மாணவி வேனிற்கு வரவில்லை’ எனக் கூறியதால் பெற்றோர் பள்ளிக்கு வந்து பள்ளி முதல்வரிடம் விசாரித்தனர்.
அப்போது, மாணவியின் தந்தைக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய பெண் ‘உன் மகளை கடத்தி வைத்துள்ளேன். ரூ.10 லட்சம் தந்தால் தான் விடுப்பேன்’ எனக்கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார். இதனால், பயந்து போன மாணவியின் தந்தை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணின் செல்போன் எண் சிக்னலை சைபர் பிரிவு மூலம் கண்காணித்து பின் தொடர்ந்தனர். மேலும், சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து எந்த ஆட்டோவில் மாணவியை அந்தப் பெண் கடத்திச் சென்றார்? ஆட்டோ எண் என்ன? என்பதனை உடனடியாக ஆய்வு செய்து தேடினர். மீண்டும் பேசிய அந்தப் பெண் உங்களுக்கு அரைமணி நேரம்தான் உள்ளது. கேட்டப் பணத்தை கொடுக்கும்படி மாணவியின் தந்தையை மிரட்டி உள்ளார். அதற்கு தன்னிடம் ரூ. 2 லட்சம் தான் இருப்பதாக மாணவியின் தந்தை கூறியுள்ளார். பணம் கொடுக்க வேண்டிய இடத்தை திரும்ப சொல்வதாக கூறி விட்டு கடத்தலில் ஈடுபட்ட பெண் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
image
இதனை தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து சாதுர்யமாக பிடிக்க சென்றனர். ஆனால், கடத்தப்பட்ட மாணவியை அந்த பெண் ஆட்டோவிலேயே வைத்து சுற்றி வந்து மீண்டும் போன் செய்து 2 லட்ச ரூபாயை ஆழ்வார்ப்பேட்டை பகுதிக்கு கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். அங்கு சென்றதும் கோடம்பாக்கம் மற்றும் வடபழனி பகுதிக்கு வருமாறு அப்பெண் அலைகழித்துள்ளார்.
இதன் பிறகு பேசிய அந்தப் பெண், பணத்தை வடபழனி 100 அடி சாலையில் தனியார் நட்சத்திர ஹோட்டல் எதிரில் பர்னிச்சர் கடையில் ரூ. 2 லட்சத்தை கொடுத்து விட்டு மகளை அழைத்து செல்லுமாறு மாணவியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, பர்னிச்சர் கடையில் உள்ள ஒருவரிடம் ரூ. 2 லட்சம் பணத்தைக் கொடுத்தும் விட்டார். மாணவியின் தந்தைக்கு மீண்டும் போன் செய்து உங்கள் வடபழனி சிக்னல் அருகில் நின்று கொண்டிருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன்பிறகு, தந்தை போலீசாருடன் அங்கு விரைந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த மாணவியை மீட்டனர். இதற்கிடையில், பர்தா அணிந்த படி பெண் ஒருவர் அந்த கடைக்குள் சென்று பணத்தை வாங்குவதை நோட்டமிட்ட போலீசார் அதிரடியாக உள்ளே சென்று அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் பணத்தை வாங்கிய அந்த கடையின் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.
image
2 பேரையும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் கடத்தலில் ஈடுபட்ட பெண் ராயப்பேட்டையை சேர்ந்த மொஹசினா பர்ஹீன் என்பது தெரியவந்தது. மாணவியின் தந்தையிடம் பணத்தை வாங்கியது பர்னிச்சர் கடையின் உரிமையாளர் இஜாஸ் அகமது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டுள்ள மொஹசினா பர்ஹீன் ராயப்பேட்டை பகுதியில் மழலையர் பள்ளி நடத்த திட்டமிட்டு அதற்காக ரூ. 10 லட்சத்திற்கும் மேலாக கடன் வாங்கி உள்ளார். ஆனால், கொரோனா காரணமாக மழலையர் பள்ளி திறக்கமுடியாததால் 10 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதால் கடனை கட்டுவதற்காக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.