சென்னை: ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை, தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு திட்டம் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்,
கோடம்பாக்கம், அடையாறில் குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்தி ரூ.1958 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஜீவன் நகரில் ரூ.400 கோடி மதிப்பீட்டிலும், கீழ்பாக்கம் தோட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில், பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மர நடை பாதை அமைக்கப்படும்.
சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
ஆவடி மற்றும் காஞ்சிபுரம் நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்படும். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பேரூராட்சிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.200 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.