லடாக் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யும் மையங்களை இணையத் தாக்குதல் (ஹேக்) மூலம் முடக்க சீனா முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம் அருகே உள்ள லடாக் எல்லைக்குள் சீனா கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவியது. இதனை தடுக்க முயன்ற இந்திய ராணுவத்தினரும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் இரு தரப்பில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர், இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் பதற்றம் ஓரளவுக்கு தணிந்துள்ளது. இருந்தபோதிலும், லடாக்கின் சில பகுதிகளில் இரு நாட்டு ராணுவத் துருப்புகளும் இன்று வரை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த சூழலில், லடாக் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யும் மையங்களை சீனா ஹேக் செய்து முடக்க முயன்றதாக தனியார் உளவு நிறுவனமான ‘ரெக்கார்டட் ஃப்யூச்சர்’ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை இந்தத் தாக்குதல் முயற்சி நடைபெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சீனாவின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள மின் விநியோக தொகுப்புகளை ஹேக் செய்து முடக்க முயன்றது உண்மைதான். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தையும் இந்தியா முறியடித்துவிட்டது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM