08.04.2022
02.30: உக்ரைன் துறைமுக நகரான மரியுபோலில் 5 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைநகர் கீவ் அருகே சிதைந்து கிடக்கும் இரண்டு அடுக்கு மாடி கட்டிடங்களில் இருந்து 26 உடல்கள் மீட்டுள்ளது என உக்ரைன் கூறியதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
01.30: ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் அமைப்பு விதித்துள்ளது. ரஷியா மீது நிலக்கரி இறக்குமதி மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
01.10: ரஷிய படைகளின் தாக்குதல் தொடங்கியது முதல் உக்ரைன் நாட்டிற்கு 1.7 பில்லியன் டாலர் பாதுகாப்பு மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான கூடுதல் உதவிகளை வழங்குவதை அமெரிக்கா இன்னும் நிறுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
12.40: ரஷியா-உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாக ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் துணை தலைவர் மார்ட்டின் கிரிஃபித் தெரிவித்துள்ளார். உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் அந்நாட்டின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஃபித், இரு தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர் மிக குறைவான நம்பிக்கையை கொண்டிருப்பதால், போர் நிறுத்த விவகாரத்தில் தாம் நம்பிக்கையை இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
07.04.2022
23.30: உக்ரைனின் மெலிடோபோ பல்கலைக்கழகத்தில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ரஷிய படையினர் கடத்திச் சென்றதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
18.00: ரஷியாவுடன் போரிட எங்களுக்கு கூடுதல் ஆயுதங்கள் தேவைப்படுகிறது. எனவே நேட்டோ நாடுகள் விரைந்து ஆவன செய்ய வேண்டும் என உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
17.00: உக்ரைனின் படைகளின் எதிர்தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வடக்கு உக்ரேனில் உள்ள கிராம மக்களை மனித கேடயமாக ரஷியப்படையினர் பயன்படுத்தியதாக, பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
16.00: உக்ரைன் மரியுபோலில் கடந்த ஒரு மாதத்தில் ரஷிய ராணுவத்தினரால் சுமார் 5,000 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 210 பேர் குழந்தைகள் என்றும் ரியுபோல் மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார். ரஷிய படைகள் உக்ரைனின் பல நகரங்களை அழித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
15.00: புச்சா நகரில் நடந்தது போல் மரியுபோல் நகரிலும் ரஷியா இனப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட அழிந்து போன இடமாக மரியுபோல் மாறி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்,.
14.00: உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஷியா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயாராகி வருகின்றன.