லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: புச்சாவில் நடந்தது போல் மரியுபோல் நகரிலும் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது- ஜெலன்ஸ்கி

07.04.2022

12.00: புச்சாவில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டது என்று உக்ரைன் குற்றம் சாட்டியது. இதற்காக ரஷியாவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் புச்சாவில் நடந்தது போல் மரியுபோல் நகரிலும் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரமான மரியு போலில் ரஷியா படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி உள்ளன. அங்குதான் அதிகமாக பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட அழிந்து போன இடமாக மரியுபோல் மாறி இருக்கிறது.


06.04.2022

21.15:
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை உக்ரைன் அதிபர் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம். அப்படி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷியா தயாராக உள்ளது என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

19.00:
உக்ரைன் விவகாரம் குறித்து மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். உக்ரைன், ரஷியா இடையிலான போர் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றே சொல்ல வேண்டும். வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது என தெரிவித்தார்.

15.00:
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், புச்சாவில் நடந்த படுகொலைகளுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. இதுதொடர்பான விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

13.00:
ரஷிய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரியதை அடுத்து,100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

04.10:
ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத்துறை செயலாளர்  ஜென் சாகி தெரிவித்துள்ளார்.  ராணுவ உதவியாக இருந்தாலும் சரி, மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி, பொருளாதார உதவியாக இருந்தாலும் சரி, உக்ரைனுக்கு எங்களின் வரலாற்று ரீதியான ஆதரவைத் தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் இந்தப் போரிலிருந்து மீள சில காலம் ஆகும் என்றும் அதுவரை அமெரிக்கா உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

03.50: 
உக்ரைனில் ரஷிய ராணுவ வீரர்கள் கொடூரமான அட்டூழியங்களைச் செய்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், ரஷிய படையினர் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன்,  அடுக்குமாடி குடியிருப்புகளில் கையெறி குண்டுகளை வீசுவதாகவும்  கூறினார். கார்களில் செல்லும் மக்கள், ராணுவ டேங்கிகள் மூலம் நசுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

02.10:
மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மரியபோல் கடல் பகுதியில் வெளிநாட்டுக் கப்பல் மூழ்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

01.10:
உக்ரைனில் ரஷியா போர் தொடங்கியது முதல் 1,19,000 ஆயிரம் குழந்தைகள் உள்பட மொத்தம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் தாமாகவே முன் வந்து ரஷியாவிற்கு சென்று விட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷிய பிரதிநிதி  வாசிலி நெபென்சியா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.