பெங்களூரு : ‘உருது பேசாததால் தான் தலித் வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா முதலில் கூறிவிட்டு, பின் அதை வாபஸ் பெற்றார்.வாலிபர் கொலை குறித்து நேற்று காலையில் உள்துறை அமைச்சர் கூறியதாவது:ஜே.ஜே., நகரை சேர்ந்த சந்துரு, 22 என்பவரின் கொலை குறித்து தகவல்களை கேட்டு பெற்றுள்ளேன். கொலை நடந்த அன்று சந்துருவை கொலையாளிகள் உருது பேசுமாறு கூறி உள்ளனர்.
அதற்கு அவர் எனக்கு கன்னடம் தவிர்த்து வேறு எந்த மொழியும் தெரியாது என கூறி உள்ளார். இதனால் அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர்.சந்துரு ஒரு தலித் வாலிபர். சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:ஜெய் மாருதி நகரை சேர்ந்தவர் சந்துரு, 22. கொலையான அன்று நண்பர் சைமன் என்பவரின் பிறந்த நாளில் பங்கேற்று மது அருந்தி உள்ளார்.சாப்பாடு வாங்குவதற்காக சைமனுடன் ஜே.ஜே நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களது வாகனம் மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியது.இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் சந்துருவை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி உள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இவர் இரண்டு மணி நேரமாக யாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதால் உயிரிழந்தார்.இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து அமைச்சர் ஞானேந்திரா தன் கருத்தை வாபஸ் பெற்று கொண்டார். “சந்துருவின் கொலை கலாட்டாவால் தான் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். முதலில் சொன்ன கருத்தை வாபஸ் பெறுகிறேன்,” என்றார்.
Advertisement