விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரதான தொழிலாக தீப்பெட்டி தொழில் இருந்து வருகிறது. சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை, படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது தீப்பெட்டிக்கான மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மூலப்பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் 11நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் வருகிற 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து சாத்தூர் வட்டார தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் லட்சுமணனிடம் பேசினோம், “சாத்தூர் பகுதியில் மட்டும் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள மக்களின் அடிப்படைத்தொழில் தீப்பெட்டி உற்பத்திதான். இதை குடிசை தொழிலாகவும் வீடுகளில் சிறிது சிறிதாக செய்கின்றனர். இதுதவிர ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை, படந்தால் உள்ளிட்ட பகுதிகளிலும் சேரத்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஆலைகளில் 50ஆயிரம் தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிலை நம்பி வேலை செய்கின்றனர்.
தற்போது தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தால் தீப்பெட்டி உற்பத்தி தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆடம்பரமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரியை காட்டிலும் தீப்பெட்டி ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி. அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் போக்குவரத்து செலவு, தொழிலாளர் கூலி, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை கணக்கிட்டால் வரவுக்கு மேல் செலவு அதிகமாக உள்ளது. ஏற்கனவே 14 ஆண்டுகளுக்கு பிறகு 50 குச்சிகள் அடங்கிய ஒரு தீப்பெட்டியின் விலையை ஒரு ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தி உள்ளோம். இதுவே எங்களுக்கு கட்டிப்படி ஆகாத நிலையில் தற்போது மூலப்பொருள்களின் விலையேற்றம் எங்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலை நீடித்தால் வருங்காலத்தில் தீப்பெட்டி உற்பத்தி இருக்குமா? என்பதை சிந்தித்து தான் பார்க்க வேண்டும். ஆகவே தீப்பெட்டி உற்பத்தி உற்பத்தியாளர்களின் நலன் கருதியும், தீப்பெட்டி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருதியும் மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தை குறைக்க அரசு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ஆலைகளின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது!