சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு முன்மாதிரியாகச் சொல்லப்படும் டெல்லி அரசுப் பள்ளிகள் செயல்படும் விதத்தை நேரில் சென்று பார்வையிட்டார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷுடன் சென்று, அப்பள்ளிகள் செயல்படும் விதத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், `டெல்லி மாடல் அரசுப் பள்ளிகள் போல தமிழகத்திலும் அமைக்கப்படும்’ எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சரி, டெல்லி மாடல் அரசுப் பள்ளிகளில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய மூளைக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா? அரசுப் பள்ளிகளில் புதுமைகளை ஏற்படுத்தி மாற்றங்களுக்கு வித்திட்ட அவர்… அதிஷி மர்லேனா!
டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்களான விஜய் குமார் சிங் – த்ரிப்தா வாஹி தம்பதியின் மகள் அதிஷி மர்லினா, அங்குள்ள ஸ்பிரிங்டேல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். டெல்லியிலுள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்ட அதிஷி, டெல்லி பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தார். அதன் பிறகு, முதுகலை படிப்புக்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, கல்வி ஆராய்ச்சியில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
பட்ட மேற்படிப்புகளுக்குப் பிறகு, மத்திய பிரதேசத்தின் சிறிய கிராமம் ஒன்றில் முற்போக்கான கல்வி முறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல், இயற்கை விவசாயம் என ஏழு வருடங்களைக் கழித்தார், அதிஷி. டெல்லியில், கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி உருப்பெற்றிருந்த நேரம் அது. யதேச்சையாக ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்த அதிஷி, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 2013-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் அறிக்கை வரைவுக் குழுவின் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்ட அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் ஆரம்பக் காலங்களில் கட்சியின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றி வந்தார். இதனால், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
அரசியலுக்கு அப்பால் இருந்த அதிஷி, எதிர்பாராத விதமாக ஆம் ஆட்மி கட்சி உறுப்பினர்களைச் சந்தித்ததால் அரசியலுக்கு வந்தார். அதன் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், தேசிய செயற்குழு ஆலோசகர், துணை முதலமைச்சர், கல்வி செயற்பாட்டாளர் எனப் பலருடன் பணியாற்றி வருகிறார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை டெல்லியின் கல்வி அமைச்சரான மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராகப் பணியாற்றி வந்தார் அதிஷி.
இதற்கிடையில், டெல்லியின் அரசுப் பள்ளிகளில் கல்வி நிலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள தொடங்கினார் அதிஷி. அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்தார். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், தேசிய செயற்குழு ஆலோசகர் ஆகிய பதவிகளை வகித்து வந்ததால், டெல்லியின் 2017 – 2018-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கல்வித் துறைக்கென 11,300 கோடி ரூபாயை ஒதுக்கச் செய்தார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட இந்த நிதியைக் கொண்டு டெல்லியில் அரசுப் பள்ளிகள் என்றாலே முகம் சுளித்த மக்கள் அவற்றை நாடி செல்லும் வகையில் மாற்றிக் காட்டினார். சிதிலமடைந்த கட்டடங்கள் புதிய உள்கட்டமைப்புகளுடன் புத்துயிர் பெற்றன. பழைய கட்டடங்களுக்கு வண்ணமயமான பெயின்ட் அடிக்கப்பட்டது. உடைந்த மேசை, நாற்காலிகளுக்குப் பதிலாக புதியவை இடமாற்றம் செய்யப்பட்டன.
அரசுப் பள்ளிகளில் புரொஜெக்டர்களோடு நவீன வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டன. ஆய்வகங்கள் உபகரணங்கள் இல்லாமல் செயல்பட்டு வந்த நிலை மாறி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஒட்டு மொத்த உள்கட்டமைப்புகளும் மாற்றப்பட்டன. டெல்லியில் புதிய அரசுப் பள்ளிக் கட்டடங்கள்கள் கட்டுவதற்கான இடத்தைக் கண்டறியும் பணி சவால் நிறைந்ததாக இருந்ததால், இருக்கும் பள்ளி வளாகங்களிலேயே புதிதாக சுமார் 8,000 வகுப்பறைகள் கட்டப்பட்டன. ஆசிரியர்கள் மட்டுமல்லாது `வழிகாட்டி ஆசிரியர்கள்’ என்ற பணி அறிமுகப்படுத்தப்பட்டு 200 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். டெல்லியில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களை நடத்த அதிஷி வழிகாட்டினார். வகுப்பறைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவு, மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்திலும், அவர்களின் வாசிப்புத் திறனிலும் பிரதிபலித்தது.
மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே பாடப் புத்தகங்களை வாசிப்பதில் சிக்கல் இருந்தாலோ, அடிப்படை கணித செயல்பாடுகளைத் தீர்க்க முடியாமல் இருந்தாலோ அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேர சிறப்பு வகுப்புகளை நடத்தவும் டெல்லி அரசுக்கு அதிஷி பரிந்துரை வழங்கினார். இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் சூழலை உருவாக்குவதற்காக நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் `மகிழ்ச்சி’ பாடம் உருவாக்கப்பட்டதற்கு அதிஷி முக்கியக் காரணமாக விளங்கினார். இதற்காக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட வல்லுநர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனிநபர்கள் அடங்கிய குழுவின் உதவியுடன் செயல்பாட்டு அடிப்படையிலான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தப் பாடத்திட்டத்தில் வழக்கம் போல் நடைபெறும் தேர்வுகள் நடத்தப்படாது. தேர்வு முடிவுகள், அதாவது, குழந்தைகளின் முன்னேற்றம் `மகிழ்ச்சிக் குறியீடு’ மூலம் மதிப்பிடப்படும். இந்தத் திட்டம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படி, டெல்லி பள்ளிக் கல்வியில் அதிஷியின் தடாலடியான நடவடிக்கைகளால், சுமார் 400 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து டெல்லி அரசு நடத்தி வரும் சர்வோதய வித்யாலயா பள்ளிகளுக்கு மாறினர். இன்னொரு பக்கம், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாணவர்களிடம் அதிகப்படியான கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் அவற்றைத் திருப்பித் தர, இரண்டு வார அவகாசம் அளித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்தது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு.
கல்வித் துறையில் டெல்லி அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு தலைமையாக விளங்கிய அதிஷி மர்லேனா, அரசின் ஆலோசகராகத் தனது பணியைத் தொடர்ந்து வந்தார். ஆனால், யூனியன் பிரதேசமாக விளங்கக்கூடிய டெல்லியில், ஆலோசகர் என்ற பதவி சட்ட விதிகளில் இல்லாததைக் காரணம் காட்டி மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2017 ஏப்ரல் மாதம் அதிரடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டார் அதிஷி. அதன் பிறகு, 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று, தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியில் எம்.எல்.ஏ-வாகப் பணியைத் தொடர்ந்து வருகிறார் அதிஷி.
இதனிடையே, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப்பின் மகள் மெலனியா ட்ரம்ப், தனது முதல் இந்திய சுற்றுப் பயணத்தின்போது டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியைப் பார்வையிட்டார். அப்போது, மகிழ்ச்சி வகுப்பில் கலந்துகொண்ட மெலனியா, ஆசிரியர்களின் மற்றும் அரசின் இந்த முயற்சியைப் பாராட்டியதோடு, அமெரிக்காவில் இந்த முயற்சியை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதிஷி நிகழ்த்திக்காட்டிய டெல்லி அரசுப் பள்ளிகளின் வியத்தகு முன்னேற்றம் மற்ற மாநிலங்களுக்கும் சொல்லும் செய்தி இதுதான்: அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் இதயமும் மூளையுமாக முன்வருபவர்களை மாநில பள்ளிக் கல்வித்துறை கண்டெடுக்க வேண்டும்.